சுங்கம், வருமானவரித் துறைகளை ஒன்லைன் சேவையாக்க வேண்டும்

சுங்கம், வருமானவரித்துறை போன்றவற்றை டிஜிட்டல் முறையாக்கி ‘ஒன்லைன்’ சேவைகளாக்குவது அவசியம் என நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  

சுங்கத் துறையோடு வர்த்தகம் தொடர்பான பெரும் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுகின்றன. அதேபோன்று வருமான வரி செயற்பாடுகளிலும் நிதி தொடர்புகள் அதிகமாக உள்ளதால் இவற்றை ஒன்லைன் முறையாக்குவது அவசியம். அவ்வாறானால் அதிகாரிகளுடனான சந்திப்புகள் இல்லாத நிலையில் மோசடிகள், களவுகள் இடம்பெறுவதைத் தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில் நேற்று பொது தொழில் முயற்சி, டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,  தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறையில் உள்ளது. எனினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரதும் அந்தரங்க விடயங்கள் தொடர்பில் பிறர் அறியுமளவுக்கு வெளிப்படை அவசியமில்லை. அது பல்வேறு சிக்கல்களுக்கே வழிவகுக்கும்.  

இத்துறை தொடர்பில் எதிர்க்கட்சியினரால் தற்போது பெரிதாகப் பேசப்பட்டாலும் 20வருடங்கள் நாம் தகவல் அறியும் உரிமை சட்டத்தைக் கொண்டுவர போராடினோம். நாம் எதிர்க் கட்சியில் இருந்துகொண்டு இந்த சட்டத்தைக் கொண்டுவர முயற்சித்தபோது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அதற்குத் தடைபோட்டது.

எமது அரசாங்கம் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஏற்றுமதித்துறைக்கு இது மிக அவசியம். சில வருடங்களுக்கு முன்பு எமது ஏற்றுமதி வருமானம் 200 மில்லியனாக இருந்திருக்கலாம் அதனை நாம் தற்போது 1.2பில்லியனாக அதிகரிக்க முடிந்துள்ளது. ஆடைக் கைத்தொழில்துறையில் டிஜிட்டல் செயற்பாடானது 95வீதமாக்க வழிவகுத்துள்ளது.  

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிறப்பு, இறப்பு, விவாக, சான்றிதழ்களை ஒரே நாளில் பெற்றுக்கொள்ளும் டிஜிட்டல் முறை திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். அதேபோன்று காணி உறுதிப் பத்திரங்களை பதிவு செய்யும் புதிய முறையையும் அறிமுகம் செய்தார். டிஜிட்டல் தொழில்நுட்பத்துறையில் கேள்வி உள்ளபோதும் விநியோகம் மந்தமாகவே உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.    

(லோரன்ஸ் செல்வநாயகம், எம். எஸ். பாஹிம்)

Thu, 03/21/2019 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை