நாட்டு மக்களைப் பாதுகாக்கும் அரசியல​மைப்பே இன்று தேவை

ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன்

நாட்டு மக்களைப் பாதுகாக்கின்ற அரசியல் யாப்பு இந்த தேசத்துக்குத் தேவையாக இருக்கின்றது. அரசியல் தலைவர்களைப் பாதுகாக்கும் அரசியல் யாப்பு இந்த நாட்டுக்கு தேவையில்லை. அரசியல்வாவாதிகளால் அரசியல் யாப்பு உருவாக்கப்படக் கூடாது. மக்களுக்கு தேவையான அரசியல் யாப்பினை மக்களே உருவாக்க வேண்டும் என்று ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன் தெரிவித்தார்.  

இந்த நாட்டை எல்லோரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. 18ஆவது திருத்தமோ 19வது திருத்தமோ அரசியல்வாதிகள் வர்த்தகம் செய்யக் கூடாது என்று கூறவில்லை. இப்போது ஜே.வி.பி. கொண்டு வந்திருக்கின்ற 20ஆவது திருத்தில் கூட அரசியல் வாதிகள் வியாபாரம் செய்யக் கூடாது என்று ஏன் கூறவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.  

1977ஆம் ஆண்டுக்குப் பிறகு அரச சொத்துக்களைக் கொள்ளையிடுவதென்பது அரசியல் வாதிகளின் இலச்சினையாக மாறிவருகின்றது. இன்று அரச காணிகளை எடுத்து அரசாங்கத்துடன் வர்த்தகம் செய்து தொழில் அதிபராக மாறிய பாராளுமன்ற உறுப்பினர்களையே இப்போது இலங்கை அரசியலில் காணக் கூடியதாகவுள்ளது.  

மக்களின் பிரதிநிகளாக இருந்துகொண்டு வியாபாரம் செய்கின்ற அரசியல்வாதிகளை, பாராளுமன்றத்தில் இருந்து வீட்டுக்குத் திருப்பி அனுப்பக்கூடியதான அரசியல் யாப்பு தற்போது தேவையாக இருக்கின்றது என்றும் விக்டர் ஐவன் கூறினார்.  

தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் மறுமலர்ச்சி இயக்கமும் ஆய்வுக்கும் கலந்துரையாடலுக்குமான நிலையமும் இணைந்து நேற்று முன்தினம் (3) கிண்ணியாவில் நடத்திய சமூக ஆர்வலர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,   அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்தித்ததன் விளைவாகத்தான் இரத்தம் தோய்ந்த வரலாறு இந்த நாட்டில் 30வருட காலமாக நீடித்தது.  

இன்று யுத்தம் இல்லாவிட்டாலும் இரத்தம் தோய்ந்த மிக ஆபத்தான ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். தினம் தோறும் ஒரு வங்குரோத்து நிலையினை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.  

அரசியல் யாப்பு ஒன்று இந்த நாட்டில் இல்லாத நிலையொன்று தோன்றியிருக்கிறது. சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து, நிறைவேற்ற வேண்டிய கடமைகளை எந்த ஒரு அரசும் நிறைவேற்றத் தவறியுள்ளதால்தான் இந்த நாட்டில் அரசியல் யாப்பு ஒன்று இருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.  

இந்த நாட்டில் அரசியல் யாப்பு ஒன்று இருந்திருக்குமானால், கண்டி திகன சம்பவம் நிகழ்ந்திருக்க முடியாது. பேருவளை, அளுத்கம பிரதேசங்கள் தீயில் எரிந்திருக்க முடியாது. அம்பாறையில் அழிவு ஏற்பட்டிருக்க மாட்டாது. ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டி ருக்கமாட்டார்கள். புலிகள் மற்றும் ஜே.பி.பி யின் போராட்டங்கள் எழுந்திருக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

(கிண்ணியா மத்திய நிருபர்) 

Tue, 03/05/2019 - 10:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை