மதுஷின் சகா 'கெலுமா' கைது

ரூ. 700 கோடி பெறுமதியான வைரக்கல், இரத்தினக்கற்கள், தங்கநகைகள் மீட்பு

பெருந்தொகையான ஆயுதங்கள், சீருடைகள், புதைத்து வைத்த பணமும் கண்டெடுப்பு

பன்னிப்பிட்டிய பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட 500 கோடி ரூபா பெறுமதியான வைரக்கல், 200 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக் கற்கள் மற்றும் நகைகளுடன் மாக்கந்துரே மதூஷின் மற்றொரு சகாவான  'கெலுமா' என்றழைக்கப்படும் கெலும் இந்திக்க சம்பத் (40)  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடை பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட கடும் முயற்சியின் விளைவாக கெலுமாவை கிரிபத்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சில வருடங்களுக்கு முன்னர் மாத்தறை பிரதேசத்தில் ஒரே பஸ்ஸில் மாக்கந்துரே மதுஷ் சாரதியாகவும் ‘கெலுமா’ நடத்துனராகவும் பணியாற்றியது முதலே இவர்களிடத்தில் அறிமுகமும் நட்பும் உருவாகியிருப்பது பொலிஸ் விசாரணைகள் மூலம்தெரிய வந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இசசம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கைது செய்யப்பட்டுள்ள ‘கெலுமா’ பிட்டிகல பிரதேசத்தில் கோடீஸ்வர வர்த்தகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்ததுடன் பாதுகாப்புக் கருதி மூன்று வாடகை வீடுகளில் மாறி மாறி தங்கியிருந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இவர் கைதாகும்போது, துப்பாக்கிச் சூடு தன் மேல் படாமல் இருப்பதற்காக தங்கத்தினாலான தாயத்து ஒன்றை ‘கெலுமா’ தனது கழுத்தில் அணிந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவரது வாடகை வீடுகளிலிருந்து மேலும் 126கையடக்கத் தொலைபேசிகள், 40பவுன் தங்க நகைகள், ஆயுதங்கள், வெடிபொருட்கள், பொலிஸ் மற்றும் இராணுவச் சீருடைகள், மதூஷ் இவருக்கு அனுப்பியதாக கருதப்படும் பணம் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

துபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துரே மதூஷின் தந்தையின் மரணச் சடங்கின்போது ஹெலிக்கொப்டரிலிருந்து பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் அதனை வீடியோ படமெடுத்து மதூஷிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட இருவர் பற்றிய தகவல்கள் பொலிஸ் திணைக்களத்தின் விசேட பிரிவுக்கு கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து மார்ச் முதலாம் திகதியளவில் இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட இருவரும் பேலியகொடை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

கடுவெல வெலிஹிந்த பிரதேசத்தைச் சேர்ந்த பனாகொடகே ஹேமால் ரஞ்சன பெரேரா (30) மற்றும் குருந்துவத்த ரணால பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டிகலகொட ஆரச்சிகே கசுன் சந்தருவன் (28) ஆகிய இருவரே கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மதூஷின் கையாட்களாக செயற்படுவது பற்றிய தகவல்கள் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் தொடர்ந்தும் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

இதில் ரஞ்சன பெரேரா என்பவர் வாகனங்களை வாடகைக்கு வழங்கும் நிலையம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்யும் கடை ஆகியவற்றை நடத்தி வருபவர்.

(லக்ஷ்மி பரசுராமன்)

Wed, 03/06/2019 - 09:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை