நகுலேஸ்வரம் கோவில் காணி சுவீகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவோம்

ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கவும் முடிவு

காங்கேசன்துறையில்அமைக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் மாளிகையை மையமாகக் கொண்டு நகுலேஸ்வரம் கோவிலுக்கு சொந்தமான காணிகள் சுவீகரிக்கப்படுவதை என்ன விலை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை ஓரிரு தினங்களில் சந்தித்துக் கலந்துரையாடவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்துறை அலுவல்கள், தெற்கு அபிவிருத்தி அமைச்சு ஆகியவை மீதனா குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரை யாற்றும்போதே மாவை சேனாதிராஜா இதனைத்தெரிவித்தார். காங்கேசன்துறைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் ‘தல்செவன’ உல்லாச விடுதிக்காக மேலதிக காணிகளை சுவீகரிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக அருகில் உள்ள ஆங்கிலப்பாடசாலை, சிறுவர்பூங்கா மற்றும் தனியாரின் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளன. இதற்கான அளவீட்டுப் பணிகளுக்கு எதிரான நாம் போராட்டங்களை நடத்தியிருந்தோம்.

அதேபோல் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலைக்குச் சொந்தமான காணியில் 163 ஏக்கரை கடற்படையினர் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். அது மாத்திரமன்றி ஏற்கனவே அப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷவின் மாளிகைக்காக 62 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் இந்த மாளிகையை மையமாகக் கொண்டு பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரத்துக்குச் சொந்தமான புனித பூமியையும் சுவீகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்து மதத்தவர்கள் ஈமைக் கடமைகளை நிறைவேற்றும் திருத்தலமாகவும், வரலாற்றுடன் தொடர்புபட்ட சித்தர்கள் வாழ்ந்த திருத்தலமாகவும் உள்ள நகுலேஸ்வரத்தின் காணிகள் சுற்றுலாத்துறையின் விஸ்தரிப்பு என்ற பெயரில் சுவீகரிக்கப்படுவது மக்களை அதிருப்திக்கு உள்ளாக்குகிறது.

லக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத் 

 

Tue, 03/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை