மருதமுனை கோல்ட் மைன்ட் அணி சம்பியன்

மருதமுனை எஸ்.பி.பவுண்டேசன் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தி வந்த மர்ஹூம் டாக்டர் எச்.எல்.ஜமால்தீன் எஸ்.எஸ்.பி ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2019 உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வு என்பன (20) இரவு மின்னொளியில் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் பொட்டியில் மருதமுனை கோல்ட் மைன்ட் வி.கழகமும் ஒலிம்பிக் விளையாட்டுக் கழகமும் ஒன்றை ஒன்று எதிர்த்து பலப்பரீட்சை நடாத்தியது. போட்டி ஆரம்பிக்கப்பட்டு 12 வது நிமிடத்தில் கோல்ட் மைன்ட் கழகத்தின் முன்கள வீரர் எம்.றிஸாப் முதலாவது கோலை ஒலிம்பிக் கழகத்திற்கு எதிராக போட்டார் (01-00) என்ற கோல் வித்தியாசத்தில் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

மீண்டும் 27 வது நிமிடத்தில் ஒலிம்பிக் வி.கழக வீரர் எம்.எச்.ஹனான் அபாரமான முறையில் கோல் ஒன்றை போட்டார் இதன் பின்னர் இரண்டு அணிகளும் எதுவித கோலினையும் போடவில்லை (01-01) என்ற கோல் சமநிலையில் போட்டி முடிவடைந்தது.

சம்பியன் அணியை தீர்மாணிப்பதற்காக இறுதியில் தண்டனை உதை வழங்கப்பட்டது. இதில் (04-03) என்ற கோல் வித்தியாசத்தில் மருதமுனை கோல்ட் மைன்ட் வி.க சம்பியன் கிண்ணத்தை தம்வசப்படுத்திக் கொண்டது. சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் கோல்ட் மைன்ட் வி.கழகம் சம்பியன் கிண்ணத்தை வென்றதால் மைதானத்தில் பட்டாசு வெடிகள் முழங்க ரசியர்கள் ஆரவரத்துடன் தமது மகிழ்சியை வெளிக்காட்டியதை காணக்கூடியதாக இருந்தது.

கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்த. இந்த சுற்றுப் போட்டியில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த 16 ”ஏ“ பிரிவு கழகங்கள் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரிசளிப்பு நிகழ்வுகள் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும் கல்முனை மாநகரசபை முதல்வருமான சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றன. இதில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக் (ஜவாத்) கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.ஏ.பி.ஹேரத், கந்தளாய் பொலிஸ்பிரிவு பொலிஸ் பரிசோதகர் யூ.எஸ்.டெனிப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சம்பியன் கிண்ணத்தை வென்ற கோல்ட் மைன்ட் கழகத்திற்கு 30000.00 ரூபா பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டன. இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்திற்கு 15000.00 பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டன. சுற்றுப் போட்டியின் மூன்றாம் இடத்தினை கல்முனை சனிமவ்ண்ட் கழகம் பெற்றுக் கொண்டது. இந்த அணிக்கு 5000.00 ரூபா பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டன. சுற்றுப் போட்டியில் 4 கோல்களை போட்டு ஒலிம்பிக் விளையாட்டுக் கழக வீரர் எம்.எச். ஹனான் சுற்றுப் போட்டியின் சிறந்த வீரருக்கான விருதை பெற்றுக் கொண்டார்.

கல்முனை சுழற்சி, பெரியநீலாவணை விசேட நிருபர்கள்

Fri, 03/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை