பெண்கள் உலகக்கிண்ண கால்பந்து தொடரை நடத்த வடகொரிய, தென்கொரிய நாடுகள் விருப்பம்

எதிர்வரும் 2023ஆம் ஆண்டுக்கான பெண்கள் உலகக்கிண்ண கால்பந்து தொடரை நடத்த வடகொரியா மற்றும் தென்கொரியா கால்பந்து சம்மேளனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

கடந்த காலங்களில் போர் பதற்றம் நிறைந்த நாடுகளாக திகழ்ந்த இவ் இருநாடுகளும், தற்போது கரம் கோர்த்து சமானதானமாக பல திட்டங்களை முன்னெடுத்துவருகின்ற நிலையில், அதன் ஒரு அங்கமாக விளையாட்;டு துறையிலும் இரு நாடுகளும் தற்போது கால்பதிக்கவுள்ளன.

ஏற்கனவே தென்கொரியா 2018ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் தொடரை நடத்தியிருந்தது. ஆகவே அந்த அனுபவம் பெண்கள் உலகக்கிண்ண கால்பந்து தொடரை நடத்துவதற்கு பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

பிரிந்த கொரிய தீபகற்பத்தில் அரசியல் பதற்றங்களை எளிதாக்கும் முயற்சியில், வடக்கு மற்றும் தெற்கில் இருந்து ஒரு ஒருங்கிணைந்த குழு கடந்த ஆண்டு பியோங்சாங்கில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிட்டது.

மேலும், ஜகார்த்தா மற்றும் பாலேம்பங்கில் உள்ள ஆசிய விளையாட்டுகளில் ஒரு பொதுக் கொடியின் கீழ் கூட்டு அணிகளாகவும் இரு அணிகளும் போட்டியிட்டன.

ஏற்கனவே எதிர்வரும் 2023ஆம் ஆண்டுக்கான பெண்கள் உலகக்கிண்ண கால்பந்து தொடரை நடத்துவதற்கு அர்ஜென்டினா, அவுஸ்ரேலியா, பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா நாடுகள் விண்ணப்பித்துள்ளன. தற்போது அந்த பட்டியலில் இவ் இரு நாடுகளும் இணைந்துள்ளன.

இத்தொடரை நடத்துவதற்கான உரிமத்தை விண்ணப்பிக்கும் இறுதி திகதி ஏப்ரல் 16ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. இதற்கான முடிவு அடுத்த வருடம் மார்ச் மாதம் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த கடுமையான போட்டியின் மத்தியில் இரு நாடுகளுக்கும், இத்தொடரை நடத்தும் வாய்ப்பு கிடைக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்

உலகில் அதிக வரவேற்பை பெரும் விளையாட்டுத் திருவிழாவான, உலகக்கிண்ண கால்பந்து தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.

அதேபோல பெண்களுக்கான உலகக்கிண்ண கால்பந்து தொடரும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இதற்கமைய, 8ஆவது பெண்களுக்கான உலகக்கிண்ண கால்பந்து தொடர், இம்முறை பிரான்ஸில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகும் இத்தொடர், எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி வரை இரசிகர்களை மகிழ்விக்கவுள்ளன.

24 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், லீக், அரையிறுதி, இறுதி என மொத்தம் 54 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் பரிஸ் உட்பட 9 நகரங்களில் நடைபெறவுள்ளன.

1991ஆம் ஆண்டு ஆரம்பமான உலகக்கிண்ண தொடரில், இதுவரை 7 தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் அதிகபட்சமாக மூன்று முறை அமெரிக்கா சம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஜேர்மனி இரண்டு முறையும், நோர்வே ஒரு முறையும் சம்பியன் பட்டம் வென்றுள்ளன.

Fri, 03/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை