கந்தளாய் அல்-தாரிக் மகாவித்தியாலயம் சம்பியன்

சீனாவில் நடைபெறவுள்ள மைலோ உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர்களை தெரிவு செய்வதற்காக 12 வயதுக்குட்பட்டோருக்கான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட அகில இலங்கை பாடசாலைகள் மைலோ கிண்ண உதைபந்தாட்ட போட்டித் தொடரில் கந்தளாய் அல் -தாரிக் மகா வித்தியாலய அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவிகரித்துக் கொண்டது.

இந்தப் போட்டித் தொடர் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களும் கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேமேளனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.எல்.எம்.நபீல் தலைமையில் நடைபெற்ற இந்த தொடரின் இரண்டாம் இடத்தை கிண்ணியா அல்-அமீன் வித்தியாலய அணியும் மூன்றாம் இடத்தை கிண்ணியா மத்திய கல்லூரி அணியும் கைப்பற்றிக் கொண்டன.

கிழக்கு மாகாணத்தில் இருந்து, ஒரு பெண்கள் அணி உட்பட 36 பாடசலை அணிகள் பங்குபற்றின. இந்த அணிகள் எட்டுக் குழுக்களாகப் பிரிக்கப்பட்ட நிலையில் போட்டிகள் நடாத்தப்பட்டன. முதல் சுற்று லீக் அடிப்படையிலும் இரண்டாம் சுற்று தனி விலகல் அடிப்படையிலும் இடம் பெற்றன.

தனி விலகல் தொடருக்கு 16 அணிகள் தெரிவு செய்யப்பட்டு, அதில் இருந்து கால் இறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு அணிகள் தெரிவு செய்யப்பட்டன.

இந்தப் போட்டித் தொடரில் கிழக்கு மாகாணத்தில் இருந்து, திறமை காட்டிய 10 பெண்களும் 20 ஆண்களுமாக மொத்தம் 30 வீரர்கள் தேசிய மட்ட போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மட்ட இந்தப் போட்டித் தொடர் மே மாதம் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் மாத்தறை உதைபந்தாட்டச் சம்மேள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த 822 ஆண்களும் 265 பெண்களும் பங்குபற்றவுள்ளனர்.

இந்த தேசிய மட்ட போட்டிகளில் இருந்து சீனா மைலோ உலகக் கிண்ண உதைபந்தாட்ட பயிற்சி முகாமுக்காக 350 வீரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்த பயிற்சி முகாம் பதுளை வின்சன் மைதானத்தில் எதிர் வரும் மே மாதம் 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. இங்கு பயிற்சியின் பின்னர் சீனாவில் நடைபெறவுள்ள மைலோ உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை வீரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற 6 ஆண்களும் 2 பெண்களுமாக மொத்தம் 8 வீரர்கள் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சீனவுக்கான மைலோ உதைபந்தாட்டச் சுற்றுலாவில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெறுவர்.

கிண்ணியா மத்திய நிருபர்

Fri, 03/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை