இறக்குமதி செய்யப்படும் பொருட்களை தரநிர்ணயம் செய்ய திட்டம்

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மின்குமிழ் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களையும் தரநிர்ணயம் செய்து சந்தைக்கு விடும் செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்படுமென அமைச்சர் சுஜீவ சேனசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  

அரசாங்கத்தின் காத்திரமான செயற்திட்டங்களால் அடுத்த வருடத்தில் 5.8வீத பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் பொது தொழில் முயற்சிகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், தகவல் தொழில் சட்டம், விஞ்ஞான தொழில் சட்டம் உள்ளிட்ட அமைச்சுக்கள் மீதான நிதியொதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  

அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,  கலைத்துறையில் பெருமளவு மாணவர்கள் உள்ளபோதும் தகவல் தொழில்நுட்பத் துறையை தேர்ந்தெடுப்பது மிகவும் குறைவானவர்களே.   இந்தியா போன்ற நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் தகவல் தொழில்நுட்பத்துறையில் பெருமளவானோர் பட்டதாரிகளாக உருவாகின்றனர்.  

அரசாங்கம் முன்னெடுத்துள்ள சிறந்த பல திட்டங்களால் இந்த வருடத்தில் 4.8வீதமும் அடுத்த வருடத்தில் 5.8வீதமாக எமது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க முடியும்.  

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் விவசாயத் துறையை முன்னேற்றும் வகையில் புதிய பயிர்ச்செய்கைகளை இனங்கண்டு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.  

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மின் உபகரணங்களை தரம் நிர்ணயம் செய்து கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.  

எலக்ட்ரோனிக் உபகரணங்கள், மின்குமிழ்கள், எண்ணெய் வகைகள் உள்ளிட்டவை வர்த்தக விளம்பரங்கள் மூலம் பாரிய அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அதன் தரம் தொடர்பில் எந்தவித பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என தெரிய வருகிறது. இது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்)

Thu, 03/21/2019 - 08:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை