கிழக்கில் தொண்டர் ஆசிரியர்களை நியமிப்பதில் அரசாங்கம் பாரபட்சம்

கிழக்கில் தொண்டர் ஆசிரியர்கள் 445 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ள போதும் அவர்களுக்கு ஆசிரிய நியமனம் வழங்குவது இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் இந்த நியமனங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் த.தே.கூட்டமைப்பு எம்.பி., சீ.யோகேஸ்வரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வடக்கில் தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு இது விடயத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்ட அவர் கிழக்கில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பவும் அமைச்சர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று கல்வி, உயர் கல்வி, நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்களுக்கான நிதியொதுக்கீட்டுக் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய யோகேஸ்வரன் எம்.பி:-

கல்வியமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதி நிதியே செலவிடப்படுகின்றது. 2016ல் ஒதுக்கப்பட்ட நிதியில் 32 வீதமும் 2017ல் 72 வீதமும் 2018ல் 74 வீதமும் செலவிடப்பட்டுள்ளது. இத்துறையில் பல்வேறு தேவைகள் உள்ள நிலையில் அவற்றை முழுமையாகச் செலவிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். நாட்டில் 3000 ற்கும் மேற்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகள் இயங்குகின்ற போதும் போதியளவு தமிழ் அதிகாரிகள் இல்லாமை பெரும் குறைபாடாகவுள்ளது.

கல்வி தாபனப் பிரிவு, தேசிய கல்வி நிறுவகம் உள்ளிட்ட கல்வியமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களிலும் மிகக்குறைவான தமிழ் மொழியில் பணியாற்றக்கூடியவர்களே உள்ளனர். பாடப்புத்தகங்களில் தமிழ் மொழிபெயர்ப்பு தவறாகவும் திரிபுபடுத்தப்பட்டும் ஒரு இனம் சார்ந்ததாகவும் அமைந்துள்ளது. அது விடயத்தில் கல்வியமைச்சர் உரிய கவனம் செலுத்துவது அவசியம். அதேவேளை; வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினர் வசமுள்ள பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக மீளபெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம், எம்.எஸ். பாஹிம்

Sat, 03/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை