புதிய துறைகளினூடாக பலப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் இணக்கம்

கென்யா - இலங்கை உறவுகளை புதிய துறைகளின் ஊடாக பலப்படுத்துவதற்கு இரு நாடுகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கென்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டாவுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (15) இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது இரு தலைவர்களும் இது தொடர்பாக விரிவாக கலந்துரையாடினர்.

கென்யாவின் ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை, கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா மகிழ்ச்சியுடன் வரவேற்றார். சுமுகமான உரையாடலை தொடர்ந்து அரச தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

ஒரே வகையான சுற்றாடல் மற்றும் அனுபவங்களைக்கொண்ட, அதேபோன்று ஒரே வகையான சவால்களுக்கு முகங்கொடுத்துள்ள நாடுகளான கென்யாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகளை பலப்படுத்துவதற்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளதுடன், இரு நாடுகளினதும் மக்களுக்கு விரிவான நன்மைகள் கிடைக்கும் வகையில் அந்த உறவுகளை பலப்படுத்துவதிலும் தலைவர்கள் கவனம் செலுத்தினர்.

குறிப்பாக விவசாயத்துறை நடவடிக்கைகளில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு தலைவர்கள் இணக்கம் தெரிவித்ததுடன், கென்யாவில் தெங்கு பயிர்ச் செய்கையை விரிவுபடுத்துவதற்கு தேவையான உதவியையும் தொழில்நுட்ப அறிவையும் வழங்குமாறு கென்ய ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

Sat, 03/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை