காங்கேசன்துறை துறைமுகத்தில் மூன்றாண்டுகளில் ஏற்றுமதி பணி

ஜப்பானிய அரசிடமிருந்து சலுகைக் கடன்

முப்பதாண்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட காங்கேசன்துறை துறைமுகத்தை மூன்று ஆண்டுகளில் அபிவிருத்தி செய்து ஏற்றுமதி பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

நாட்டின் எந்தவொரு துறைமுகத்தினதும் முனையங்களை நாம் விற்கவில்லை. விற்கப்போவதுமில்லை.

அதன் அபிவிருத்தியைக் கருத்திற் கொண்டு மதிப்பீடு அடிப்படையில் குத்தகைக்கு மட்டுமே விட்டிருப்பதாகவும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த அரசாங்கம் துறைமுகங்களின் பகுதிகளை விற்பனை செய்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆனால், அதில் எவ்வித உண்மையும் இல்லை. கடந்த வருடம் பல சவால்களை நாம் எதிர்கொண்டோம். இவ்வருடம் மேலும் சிறப்பாக நாம் எமது திட்டங்களைச் செயற்படுத்துவோமென்றும் அமைச்சர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, துறைமுகங்கள், கப்பல்துறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது-

எந்தவொரு முனையமும் விற்கப்படவில்லை. கொழும்பு துறைமுகம் பாரிய வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த வருடம் 07 பில்லியன் கொள்கலன்களை ஏற்றி இறக்கியுள்ளது. சர்வதேச தரத்தில் இதனை நாம் தரமுயர்த்தியுள்ளோம். ஜப்பான் அரசாங்கம் எமது துறைமுகங்களின் அபிவிருத்திக்காக 40 வருடத்துக்கு சலுகை அடிப்படையில் கடன் வழங்கியுள்ளது. இதற்காக 10 வருடங்களுக்கு வட்டி அறவிடப்பட மாட்டாது. அதன் பின்னர் 1.4 சதவீத வட்டி அறவிடப்படவுள்ளது. இந்த இக்கடனைக் கொண்டு நாம் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வோம். குறிப்பாக 30 வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தியில் நாம் கூடுதல் அக்கறை செலுத்தவுள்ளோம்.அதேபோன்று திருகோணமலை துறைமுகத்தையும் நாம் மேம்படுத்தவுள்ளோம். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நாம் குறைகூறவில்லை. எனினும், இதற்கு எடுக்கப்பட்ட கடனை திருப்பிச் செலுத்தும் முறை மற்றும் இதன் மூலம் பெறக்கூடிய வருமானங்களுக்கான வழிமுறைகளை கடந்த அரசாங்கம் கண்டறிந்திருக்கவில்லை. எனவே நாம் அதற்கு தீர்வு கண்டுள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

லக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்

Tue, 03/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை