வடக்கில் 5 மாவட்டங்களிலும் தனித் தனி அலுவலகங்கள்

* ஐ.நா ஆணையாளரின் அறிக்ைகயில் குறைபாடுகள்
* சர்வதேச நீதிபதிகளை கோருவது தேசத்துரோகம்
* சுமந்திரனின் கூற்றுக்கு விரைவில் தக்க பதில்

எதிர்வரும் மே மாதத்திற்கு முன்னதாக வடக்கிலுள்ள 5 மாவட்டங்களிலும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகங்களைத் துரிதமாக ஸ்தாபிக்க இருப்பதாக ஜெனீவா மனித உரிமை அமர்வில் பங்கேற்ற இலங்கைத்தூதுக்குழு உறுப்பினரும் வடமாகாண ஆளுநருமான சுரேன் ராகவன் தெரிவித்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய 5 மாவட்டங்களில் இந்த அலுலலகங்கள் ஸ்தாபிக்கப்படும்.

காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புள்ளவர்கள் குறித்து விசாரிப்பதும் காணாமல் போனோர் அலுவலகத்தின் ஓர் அங்கம் என்று குறப்பிட்ட அவர் இதனூடாகத் தவறு செய்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த முடியும் எனவும் கூறினார்.

கொழும்பிலுள்ள வடமாகாண ஆளுநரின் இணைப்பு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இணையத்தளங்களில் இருந்தும் டயஸ் ​போராக்களிடம் இருந்தும் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ளதோடு இதிலுள்ள தவறுகளை ஆணையாளர் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையின் உண்மை நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக நேரில் வருமாறும் ஆணையாளருக்கும் டயஸ்போராக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதியின் தலையீட்டினால் இம்முறை அமர்வை சாதகமானதாக மாற்ற முடி ந்ததாகவும் தெரிவித்தார். ஜெனீவா மனித உரிமை அமர்வில் இலங்கை சார்பில் கலந்து கொண்ட ஐவர் குழுவில் அங்கம் வகித்த வட மாகாண ஆளுநர், தமது விஜயம் குறித்து நேற்றைய ஊடக மாநாட்டில் விளக்கமளித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

2015 இல் வௌிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர, அமெரிக்காவுடன் இணை அனுசரணை வழங்கிய யோசனையின் பிரகாரம் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கலப்பு நீதிமன்றம் உருவாக்கவும் சர்வதேச நீதிபதிகளை நியமிக்கவும் இணக்கம் காணப்பட்டிருந்தது. இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் இந்த யோசனைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியது.இந்த நிலையில், இம்முறை மாநாட்டில் பங்கேற்காது இணை அனுசரணை வழங்க பிரதமர் தலைமையிலான அரசு முடிவு செய்திருந்தது.

ஜனாதிபதி குழு நியமிப்பு

இது நாட்டுக்கு சாதகமாக அமையாது என்று உணர்ந்த ஜனாதிபதி என்னையும் சரத் அமுனுகம. மஹிந்த சமரசிங்க ஆகியோரையும் ஜெனீவா செல்ல நியமித்தார். இரண்டு குழுக்கள் ஜெனீவா செல்வது நாட்டுக்கு அவமானமாக அமையும் என்பதால், அமைச்சர் திலக் மாரப்பனவின் தலைமையில் ஒரே குழுவாக அமர்வில் பங்கேற்க முடிவு செய்தோம்.

மனித உரிமை அமர்வில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை ஒன்றரை மாதத்திற்கு முன்னதாக இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தது. இது பற்றி ஆராய விசேட நிபுணர் குழு நியமிக்கப்பட வேண்டிய இருந்த போதும் எவரும் நியமிக்கப்படவில்லை. இந்த அறிக்கை பற்றி ஜனாதிபதிக்கு அறிவிக்கவோ பாராளுமன்றத்தில் ஆராயவோ இல்லை. யார் ஜனாதிபதியாக இருந்தாலும் இந்த அறிக்கை குறித்து ஜனாதிபதியுடன் ஆராய்ந்திருக்க வேண்டும்.

ஆணையாளரின் அறிக்கையையும் முன்னைய யோசனையை ஏற்று இணை அனுசரணை வழங்கவும் அரசாங்கம் முன்கூட்டி முடிவு செய்திருந்த நிலையில், குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்கும் ஆவணம் தயாரிப்பது தான் எமக்கு ஜெனீவாவில் எஞ்சியிருந்த பணியாகும்.

குற்றச்சாட்டுகளுக்கு பதில்

யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க செயற்பாடுகளுக்கு சர்வதேச சமூகம் முன்வைக்கும் யோசனைகளை நாம் ஏற்றுக் கொண்டோம். கடந்த 3 வருட காலத்தில் வடக்கு கிழக்கில் இராணுவம் எந்த வித தவறான செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்பதையும் எமது பதிலில் சுட்டிக்காட்டினோம். 75 வீத காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.ஆனால் 92 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினோம். காணாமல் போனோர் அலுவலகம் அமைக்க வரவு செலவுத் திட்டத்தில் 1.3 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதையும் தௌிவு படுத்தினோம்.

வடக்கு கிழக்கில் 45 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதோடு மேலும் 20 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் எமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.

11,500 பேருக்கு சட்டபூர்வ ஆவணங்கள்

யுத்தம் காரணமாக வடக்கில் 11,500 பேர் சட்டபூர்வ ஆவணங்களை இழந்துள்ளதோடு அவற்றை வழங்க ஆவண செய்யப்பட்டுள்ளதோடு ஏப்ரலில் காணி இல்லாதவர்களுக்கு அரச காணிகளை தற்காலிகமாக வழங்க இருக்கிறோம். இந்தியாவில் இருக்கும் 83 ஆயிரம் இலங்கையர்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றவும் திட்டம் தயாரிக்கப்படுகிறது.

யுத்தத்தில் இருதரப்பும் தவறுகளை செய்திருந்தும் இராணுவத்தில் யாராவது தவறு செய்தது நிரூபணமானால் சிவில் சட்டத்தின் கீழும் ராணுவ சட்டத்தின் கீழும் தண்டிப்பதாக இராணுவத் தளபதி உறுதியளித்துள்ளார்.சிறு குழு செய்த தவறுக்கு முழு இராணுவமும் முழு அரச இயந்திரம் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

உள்நாட்டில் விசாரணை

யுத்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் கொண்டுவர வேண்டும் என சிலர் கோருகிறார்கள். இது தேசத்துரோக செயலாகும். அவ்வாறு வௌிநாட்டு நீதிபதிகள் தேவையானால், எமது நீதித்துறை சுயாதீனமற்றது என நிரூபிக்க வேண்டும்.

ஒக்டோபரில் ஜனாதிபதிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது எமது நீதித் துறையின் சுதந்திரத்தையே காட்டுகிறது.

வௌிநாட்டு நீதிபதிகளை நியமிக்க அரசியலமைப்பில் மாற்றம் செய்ய வே்ண்டும்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் எவரிடமும் சரியான புள்ளிவிபரங்கள் கிடையாது. காணாமலாக்கப்பட்டவர்களின் உடல்பாகங்களே மன்னார் மனிதப் புதைகுழிகளில் இருப்பதாகவும் ஆணையாளரின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அது தொடர்பிலும் விளக்கமளித்தோம். இந்த அறிக்கையிலுள்ள மேற்கோள்கள் கொசிப் தளங்களில் இருந்தே பெறப்பட்டுள்ளன. திகன சம்பவம் குறித்து தனியான பகுதி உள்ளடக்கப்பட்டிருந்தது.

ஆணையாளரின் அறிக்கையில் குறைபாடுகள்

ஆணையாளரின் அறிக்கையில் பல குறைபாடுகள் இருப்பதை நாம் சுட்டிக்காட்டினோம். எதிர்காலத்தில் அவ்வாறான குறைபாடுகள் தவிர்க்கப்படும் என அவர் உறுதியளித்தார். இலங்கை தொடர்பான அறிக்கையை தயாரித்தவர்களில் கனடா பிரஜை ஒருவரும் இருக்கிறார்.

ஜெனீவாவில் சிங்கள , தமிழ் டயஸ்போராக்களுடனும் நான் தனித்தனியாக பேசினேன். வடக்கிற்கு வந்து உண்மை நிலைமைகளைக் கண்டறியுமாறும் உதவிகள் செய்யுமாறும் கோரினேன்.

சுமந்திரன் எம்.பியின் குற்றச்சாட்டு

சர்வதேச நீதிமன்றத்திற்குச் செல்லப்போவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருக்கிறார். பாராளுமன்றத்திலும் அதனை வலியுறுத்தியிருக்கிறார்.அவரின் கருத்து தொடர்பில் வௌிவிவாகார அமைச்சின் குழு நிலை விவாதத்தில் உரிய பதில் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறேன். சர்வதேச சமூகம் இலங்கை தொடர்பில் யோசனைகள் முன்வைத்தாலும் எமது பயணம் தொடர்பில் நாம் தான் முடிவு செய்ய முடியும்.யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ளன. உண்மையைக் கண்டறிவதற்காக கால எல்லை தொடர்பில் ஒவ்வொரு நாட்டினதும் பொருளாதார அரசியல் விடயங்களுக்கு அமையவோ முடிவாகும்.

எமது பொறுப்பை சரிவர நிறைவேற்றியிருக்கிறோம். இதில் வெற்றியும் அடைந்துள்ளோம். ஜனாதிபதியை சந்தித்து எமது விஜயம் குறித்து அறிவித்தோம். எமக்கு வழங்கிய பொறுப்பை நிறைவேற்றியது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். அடுத்த மாதம் சிங்கள தமிழ் புத்தாண்டு இருந்தாலும் அடுத்த மாதத்தினுள் வடக்கில் காணாமல் போன அலுவலகங்களை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். இதன் போது காணாமல் போனோரின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தனித்தனியாக தமது குற்றச்சாட்டுகளையும் கருத்துகளையும் முன்வைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.(பா)

ஷம்ஸ் பாஹிம்

Tue, 03/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை