நீல நிறங்களின் மாபெரும் சமரில் தோமியர் கல்லூரிக்கு அதிக கௌரவம்

கல்கிஸ்சை புனித தோமியர் மற்றும் கொழும்பு றோயல் கல்லூரிகளுக்கு இடையில் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று வரும் 140ஆவது நீல நிறங்களின் சமரின் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என சகலதுறையிலும் பிரகாசித்த புனித தோமியர் கல்லூரி அணி,போட்டியில் அதிக கௌரவத்தைப் பெற்றுக்கொண்டது.

உலகின் மிகவும் பழமையான கிரிக்கெட் தொடரில் 2ஆவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ள நீல நிறங்களின் சமர் என்று அழைக்கப்படும் புனித தோமியர் மற்றும் றோயல் கல்லூரிகளுக்கு இடையிலானமூன்று நாட்கள் கொண்ட இந்த மாபெரும் கிரிக்கெட் சமரில் முதலில் துடுப்பாடிடிய றோயல் கல்லூரி, முதல் இன்னிங்ஸுக்காகசகல விக்கெட்டுகளையும் இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் தோமியர் கல்லூரியின் கலன பெரேரா 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த புனித தோமியர் கல்லூரி அணி,கலன பெரேரா மற்றும் உமயங்க சுவாரிஸ் ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தினால் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காகத் துடுப்பாடிவரும் றோயல் கல்லூரி அணி, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் போது 4 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

நேற்று (08) காலை தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தினை தோமியர் கல்லூரி அணியினர் 158 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் தொடர்ந்தனர்.

அந்த அணி, ஆரம்பத்தில் 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றம் கண்டது. எனினும்,8ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த கலன பெரேரா மற்றும் உமயங்க சுவாரிஸ் ஜோடி 91 ஓட்டங்களை இணைப்பாகப் பெற்று தோமியர் கல்லூரிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.

அந்த அணிக்காக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கலன பெரேரா 62 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் கவிந்து பத்திரனவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து இறுதி விக்கெட்டுக்காக தோமியர் கல்லூரியின் துடுப்பாட்ட இன்னிங்ஸை களத்தில் நின்ற உமயங்க சுவாரிஸ் மற்றும் புதிய துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஷெனொன் பெர்னாண்டோ ஆகியோர் முன்னெடுத்துச் சென்றனர். இதில் அபாரமாக துடுப்பாடிய உமயங்க, அரைச்சதம் பெற்று வலுச்சேர்த்தார்.

தோமியர் கல்லூரிக்காக சிறப்பான முறையில் ஓட்டங்களைக் குவித்த உமயங்ன சுவாரிஸ் 9 பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போதும், துரதிஷ்டவசமாக ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்து களத்திலிருந்து வெளியேறினார்.

இவரது ஆட்டமிழப்புடன் புனித தோமியர் கல்லூரியின் இன்னிங்ஸ் நிறைவுக்கு வர அந்த அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

றோயல் கல்லூரி அணி சார்பில், பந்துவீச்சில் கமில் மிஷார மற்றும் கவிந்து பத்திரன ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், கிஷான் பாலசூரிய 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து 138 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை றோயல் கல்லூரி அணி ஆரம்பித்தது.

முதலாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த கமில் மிஷார மற்றும் இஷாவர திஸாநாயக்க ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைச்சத இணைப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

எவ்வாறாயினும், நிதானமாக துடுப்பாடிய இஷாவர திஸாநாயக்கவின் விக்கெட்டை சலின் டி மெல் கைப்பற்றினார். அவர் 77 பந்துகளுக்கு முகங்கொடுத்து 20 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கலன பெரேராவின் பந்துவீச்சில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமில் மிஷார 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய அஹான் விக்ரமசிங்க (26), கவிந்து மதாரசிங்க (25) ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுக்க றோயல் கல்லூரி அணி மீண்டும் நெருக்கடிக்கு முகங்கொடுத்தது.

எனினும், பாக்ய திஸாநாயக்க, கவிந்து பத்திரனவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, றோயல் கல்லூரி அணி ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 133 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில், கவிந்து பத்திரன 20 ஓட்டங்களையும், பாக்ய திஸாநாயக்க 16 ஓட்டங்களையும் பெற்று களத்தில் உள்ளனர். பந்துவீச்சில், கலன பெரேரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதேநேரம், றோயல் கல்லூரி அணியானது, புனித தோமியர் கல்லூரியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையைவிட 40 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

இன்று போட்டியின் மூன்றாவது நாளாகும்.

(பீ.எப் மொஹமட்)

Sat, 03/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை