கிழக்கு கரையோரச்சமரில் விபுலாநந்தா- உவெஸ்லி அணிகள் பலப்பரீட்சை

'கிழக்கு கரையோரச்சமர்' ( Eastern Coastal War) என்ற பெயரில் டெலிகொம் நிறுவன அனுசரணையுடன் கிரிக்கெட் பெருஞ்சமர் எதிர்வரும் 12ஆம் திகதி காரைதீவில் நடைபெறவுள்ளது.

காரைதீவு விபுலாநந்தா மத்தியகல்லூரிக்கும் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலைக்குமிடையே வரலாற்றில் முதற்றடவையாக இப்போட்டி நடைபெறவுள்ளது.

அதனையொட்டிய ஊடகவியலாளர் மாநாடு கடந்த (7) வியாழக்கிழமை கல்முனை உவெஸ்லி உயர்தரக்கல்லூரியில் நடைபெற்றது.

டெலிகொம் நிறுவனத்தின் கல்முனைப் பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் பிரான்சிஸ் நியூட்டன் கலந்துகொண்டு பெருஞ்சமர் பற்றிவிபரித்தார்.

அவர் தொடந்து உரையாற்றுகையில்:

டெலிகொம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் 10 மாவட்டங்களில்பாடசாலைகளுக்கிடையே இத்தகைய பெருஞ்சமர் நடைபெறுகிறது.

பாடசாலை மாணவரிடையே கிரிக்கெட் துறையில் ஒளிந்துகிடக்கும் திறமைகளை வெளிக்கொணர்வதும் ஜக்கியம் புரிந்துணர்வை ஏற்படுத்துவதும் சகோதரத்துவத்தை வளர்ப்பதும் இதன்நோக்கங்களாகும். உண்மையில் பாடசாலைகளில் தேசிய சர்வதேச போட்டிகளுக்குச் செல்லக்கூடிய திறமையான வீரர்கள் இருப்பார்கள். அவர்களை இனங்காண்பதும் ஒரு துணைநோக்கமாகும்.

டெலிகொம் வரலாற்றில் முதற்றடவையாக இப்பெருஞ்சமர் இங்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதற்கு டெலிகொம் அனுசரணை வழங்குகிறது.

தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இப்பெருஞ்சமர் நடைபெற டெலிகொம் தொடர்ந்து அனுசரணைவழங்கும்.

கிழக்கிற்கான பெருஞ்சமர் உவெஸ்லி மற்றும் விபுலாநந்தா கல்லூரிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.

முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்தஅடிகளார் பிறந்த மண் காரைதீவில் அவர்நாமத்துடன் இலங்கும் பாடசாலை விபுலாநந்தா மத்தியகல்லூரி என்பதாலும் அவர் பயின்ற பாடசாலை கல்முனை உவெஸ்லி என்பதாலும் இவ்விருபாடசாலைகளும் இச்சமருக்காக தெரிவுசெய்யப்பட்டன.

காரைதீவு விபுலாநந்தா மைதானத்தில் நடைபெறவுள்ளது. டெலிகொம் நிறுவனத்தின் பிரதிப்பொதுமுகாமையாளர் வருகைதரவுள்ளார். இதற்கு அனைவரதும் ஒத்துழைப்பை நாடி நிற்கிறேன். என்றார்.

மாநாட்டில் உவெஸ்லி அதிபர் வ.பிரபாகரன், பிரதிஅதிபர் எஸ்.கலையரசன், விபுலாநந்தா அதிபர் தி.வித்யாராஜன், பிரதிஅதிபர் ம.சுந்தரராஜன், அணிகளின் பயிற்றுவிப்பாளர்கள் , இரு அணிகளதும் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Sat, 03/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை