கண்டி புதிய ஒரு வழி பாதை திட்டம் கைவிடப்படாது; ஆளுநர் உறுதி

மக்கள் போராட்டம்; மகாநாயக்கர்களிடம் முறையிட தீர்மானம்

கண்டியில் புதிதாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஒரு வழிப் பாதைப் போக்குவரத்து நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் செய்து வருவதோடு அஸ்கிரிய மல்வத்த பௌத்த பீடாதிபதிகளான மகாநாயக்கர்களை சந்தித்து முறையிடவும் தீர்மானித்துள்ளனர்.

ஆனால் இந்த திட்டத்தை ஒருபோதும் தான் நிறுத்தப் போவதில்லை என்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன உறுதியாக தெரிவித்தார்.

கண்டி நகரிலிருந்து கொழும்பு, கம்பளை, பிலிமத்தலாவ போன்ற பகுதிகளுக்கு செல்ல தனி வழிப் பாதையாக பேராதனை பழைய வீதியையும், கொழும்பு - கம்பளையிலிருந்து கண்டிக்கு வரும் வாகனங்கள் வில்லியம் போபல்லாவ வீதி வழியாகவும் தனி வழி பாதையாக்கியுள்ளனர்.

மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவினால் இத்திட்டம் 03ஆம் திகதி முதல் அமுலாக்கப்பட்டது.

இதன் மூலம் கண்டி நகரத்திற்கு வருகை தரும் மற்றும் வெளியேறும் நேர காலம் 25நிமிடங்களாகக் குறைக்கக்கூடியதாக இருக்கும் என்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ள போதிலும் தற்போது இது தோல்வியிலேயே முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேல் கண்டியிலிருந்து வெளியேறும் வாகனங்களும், கண்டிக்கு வரும் வாகனங்களும் வாகன நெரிசல் காரணமாக பெரும் சிரமத்திற்குள்ளாவதாகவும், பாடசாலை மாணவர்களும் அலுவலகத்திற்கு செல்வோர்களும் சரியான நேரத்திற்கு சமூகமளிக்கமுடியால் பாதையிலேயே காலத்தை கழிக்கின்றனர் எனவும் தெரிவித்து நேற்று (06) டயர்களை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இன்றையதினம் (07) தெய்யன்னவெல சந்தியில் பொதுக்கூட்டம் நடாத்தியதோடு அஸ்கிரிய மல்வத்த பௌத்த பீடாதிபதிகளான மகாநாயக்கர்களை சந்தித்து முறையிடவும் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை எந்த ஆர்ப்பாட்டங்களை செய்தாலும் இந்த திட்டத்தை ஒருபோதும் தான் நிறுத்தப் போவதில்லை என்றும் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.

(கண்டி தினகரன் சுழற்சி நிருபர் - ராசைய்யா மகேஸ்வரன்)

Thu, 03/07/2019 - 15:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை