கிழக்கு தமிழ் பகுதிகளில் ஹர்த்தால்; ஆர்ப்பாட்டப் பேரணி

மட்டு. மாவட்டம் முடங்கியது முஸ்லிம் பிரதேசங்களில் இயல்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், இலங்கை அரசாங்கத்துக்கு ஜெனீவாவில் மேலும் கால அவகாசத்தை வழங்கக்கூடாதென வலியுறுத்தியும் கிழக்கு மாகாணத்தில் நேற்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பாரிய மக்கள் பேரணியால் நகரம் முற்றாக முடங்கியது.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் முழுமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. எனினும், முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வழமையான நாளாந்த செயற்பாடுகள் எவ்வித இடையூறுகளுமின்றி முன்னெடுக்கப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. இருந்தபோதும், கல்முனை நகரில் முஸ்லிம் வர்த்தகர்களும் கடைகளை மூடி ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

தமிழர்கள் வாழும் பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டு வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகவும் குறைவாகக் காணப்பட்டது. சில பகுதிகளில் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கருகில் இருந்து பேரணி ஆரம்பமாகி புகையிரத வீதியூடாகச் சென்று திருமலை வீதியூடாக மட்டக்களப்பு காந்தி பூங்காவையடைந்து அங்கு கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேசம் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்க வேண்டும், அரசாங்கத்தில் நம்பிக்கையிழந்த நிலையிலேயே தாம் சர்வதேசத்திடம் நீதி கோரி நிற்பதாகவும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

காணாமல்போன தமது சொந்தங்களின் உருவப்படங்களை தாங்கியவாறும், நீதி கோரிய வாசகங்களை உள்ளடக்கிய பதாகைகளை ஏந்தியவாறும் நூற்றுக்கணக்கானவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பில் நடைபெற்ற பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், எஸ்.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் மற்றும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே. துரைராசசிங்கம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், சிவில் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

போராட்டங்களை நடத்தும் சூழ்நிலையில் அது தொடர்பாக கவனம் செலுத்தாத ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையில் தமது பிரச்சினையை உள்ளூர் பொறிமுறையில் தீர்க்கப்போவதாக தெரிவித்திருப்பதானது தமக்குப் பெரும் ஏமாற்றத்தை தருவதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.

(மட்டக்களப்பு விசேட, கல்லடி குறூப், புதிய காத்தான்குடி, பெரியபோரைதீவு, வெல்லாவெளி தினகரன், வாச்சிக்குடா நிருபர்கள்)

நமது நிருபர்கள்

Wed, 03/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை