ஜெனீவாவில் இன்று தீர்மானகரமான அமர்வு

 * இலங்கை விவகாரம் குறித்த விவாதம்
 * புதிய பிரேரணை நிறைவேற்றப்படலாம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை விவகாரம் குறித்த விவாதம் நடைபெறுகிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிட்ட இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இவ்விவாதம் நடைபெறவுள்ளது.

ஜெனீவா நேரப்படி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை இலங்கை விவகாரம் ஆராயப்படவுள்ளது.

இலங்கை அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றுகிறார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையிலும், கடந்த காலங்களில் அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளை விளக்கும் வகையிலும் இந்த உரை அமையுமென வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், இலங்கை விவகாரம் தொடர்பில் நாளையதினம் புதிய பிரேரணையொன்றும் நிறைவேற்றப்படவுள்ளது. 30/1 பிரேரணையில் இணங்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் கோரும் விதமாக புதிதாக 40/1 பிரேரணை நிறைவேற்றப்படவுள்ளது. இந்தப் பிரேரணைக்கு கடந்த முறையைப் போல இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்குகிறது. இதற்கு பிரிட்டன் தலைமை தாங்கியிருப்பதுடன், பல நாடுகள் ஆதரவு வழங்க வந்திருப்பதால் வாக்கெடுப்பின்றி இப்பிரேரணை நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021ஆம் ஆண்டு வரையில் கால அவகாசம் வழங்குவது இதன் நோக்கமாக இருக்கும் என இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. இந்தப் பிரேரணையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் பற்றிய மேலதிக விபரங்களை உள்ளடக்க வேண்டும் என அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதை அயல் நாடான இந்தியா உள்ளிட்ட நாடுகள் வரவேற்றிருப்பதாகத் தெரியவருகிறது.

மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது அமர்வில் இலங்கை குறித்து புதிய பிரேரணையொன்றை நிறைவேற்றுவதற்கு தலைமை தாங்கிய பிரித்தானியா, பிரேரணையை தயாரிக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் அது பற்றி இந்தியாவுக்குத் தெரியப்படுத்தி வந்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா இம்முறை உறுப்பு நாடாகப் பங்கேற்கிறது.

தற்பொழுதுள்ள சூழ்நிலையில் இலங்கைக்கு மேலும் கால அவகசாம் வழங்குவதே பொருத்தமானது. தடைகளையும் நெருக்கடிகளையும் வழங்குவதற்கு இது தருணமல்ல என்று இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கை தொடர்பான பிரேரணையில் கடுமையான விடயங்களை உள்ளடக்கச் செய்வதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் முயற்சித்துவரும் நிலையில், இந்தியா தலையிட்டு சர்வதேச நாடுகளுக்கு இலங்கையின் பிந்திய நிலைமைகளை நினைவு படுத்தியிருப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தப் பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்காவிட்டால் நாளையதினம் வாக்கெடுப்புக்குச் சென்றால் நிலைமைகளைச் சிக்கலாக்கும் என்ற விடயத்தை இந்தியா, ஜனாதிபதிக்கு விளக்கிக் கூறியிருப்பதாகவும் அந்தச் செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை விவகாரம் இன்று ஜெனீவாவில் கலந்துரையாடலுக்கு எடுக்கப்படுகிறது.

இன்றைய அமர்வு இலங்கைக்கு தீர்க்கமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நமது நிருபர்

Wed, 03/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை