ஹம்பாந்தோட்டை ஏற்றுமதி வலயத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு தாங்கித் தொகுதி

உடன்படிக்கை பிரதமரால் கைச்சாத்து

அம்பாந்தோட்டையிலுள்ள மிரிஜ்ஜவில ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் தாங்கித் தொகுதி ஒன்றை நிறுவுவதற்கான உடன்படிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மிரிஜ்ஜவிலயில் வைத்து கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த திட்டத்துக்கான மொத்த முதலீடு 3.85 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். தனியொரு திட்டத்துக்கு செய்யப்படும் அதிக அளவிலான நேரடி வெளிநாட்டு முதலீடு இதுவாகும்.

அதேவேளை இத்துடன் 100 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான சீமெந்து தயாரிப்பு நிறுவன உடன்படிக்கையை இலங்கை உருக்கு கூட்டுத்தாபனம் ஐக்கிய அரபு குடியரசின் ONYX குழுமத்துடன் கைச்சாத்திடவுள்ளது. மேற்படி இரு திட்டங்களும் 1500 பேருக்கு மேற்பட்டோருக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் என்று அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளின் பண்டார கூறினார்.

புதிதாக அமைக்கப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு தொகுதி 1968ஆம் ஆண்டுக்கு பின்னர் அமைக்கப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு தொகுதியாகும்.

சிங்கப்பூர் மற்றும் ஓமானின் எண்ணெய் அமைச்சும் மேற்கொள்ளும் 100 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீட்டு திட்டத்துக்கு 200 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு தொகுதி மூலம் இலங்கையின் பெட்றோலிய கூட்டுத்தாபனமும் லங்கா ஐ.ஓ.சியும் தங்கள் மசகு எண்ணெய்யை குறைந்த விலையில் சுத்திகரித்துக் கொள்ளலாம்.

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்ைகக்கு பலத்த விமர்சனங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், இந்த முதலீட்டின் மூலம் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று கூறிய பிரதி அமைச்சர், இது போன்ற செயற்பாடுகள் மேலும் தொடரும் என்று குறிப்பிட்டார்.

மிரிஜ்ஜவிலயில் அமையப்போகும் சீமெந்து தயாரிப்பு நிறுவனம் உள்ளூர் நிர்மாண கைத்தொழிலை இலக்குவைத்துள்ளதாகவும் இந்த நிறுவனம் ஐந்து வருடத்துக்குள் நிறைவு பெறும் என்றும் குறிப்பிட்டார்.

Wed, 03/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை