இந்திய விங் கொமாண்டரை விடுவித்தது பாகிஸ்தான்

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ஒப்படைப்பு

பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்தமன், இந்தியாவிடம் நேற்று (01) ஒப்படைக்கப்பட்டார்

பாகிஸ்தான் – இந்திய எல்லையில் நேற்று மாலை இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டதாக இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் இந்திய எல்லைக்கப்பாலுள்ள பாலகோட் பயங்கரவாத நிலைகள் மீது இந்திய இராணுவம் அதிரடித் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து, இந்திய எல்லைக்குள் ஊடுருவி பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதன்போது போர் விமானங்களைத் துரத்திச் சென்று தாக்குதல் நடத்திய விங் கமாண்டர் அபிநந்தனின் மிக் 21 ரக போர் விமானம், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் வீழ்ந்தது. இதன்போது பரசூட் மூலம் உயிர் தப்பிய விமானி அபிநந்தனைப் பாகிஸ்தான் இராணுவத்தினர் சிறைப்பிடித்தனர்.

அவரை எந்தவிதப் பங்கமும் இன்றி விடுவிக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது. அதற்கமைய பல உகல நாடுகளும் அபிநந்தனை விடுவிக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்தியிருந்தன.

இந்நிலையில், இந்திய விமானியை விடுதலை செய்வதாகப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். அதற்கமைய அபிநந்தனை தனது விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வருவதாக  இந்தியா தெரிவித்திருந்தது. எனினும், பாகிஸ்தான் அதனை நிராகரித்துவிட்டது.

நேற்று மாலை விமானம் மூலம் லாகூருக்கு அழைத்து வரப்பட்ட அபிநந்தன், இந்திய எல்லையில் வைத்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அபிநந்தனின் விடுதலையை எதிர்பார்த்துப் பெருந்திரளான மக்கள் இந்திய கொடியை அசைத்தவாறு எல்லையில் நீண்டநேரமாகக் காத்திருந்தனர். நூற்றுக்கணக்கான உள்ளூர், சர்வதேச ஊடகவியலாளர்களும் திரண்டிருந்தனர்.

அபிநந்தன் விடுதலையாகி வருவதையொட்டி வாகா எல்லையில் வழக்கமாக நடைபெறும் கொடி இறக்க நிகழ்வு, நேற்று இரத்து செய்யப்பட்டது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் பெரும்பாலும் தணிந்திருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ‘எங்களுக்கு போரின் மீது விருப்பம் இல்லை’ என்று நேற்று முன்தினம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அந்நாட்டில் சிறைப்பட்டு இருக்கும் இந்திய விமானியை விடுவிக்க போவதாகவும் கூறினார். தற்போது அதேபோல் அபிநந்தன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் நேற்று முதல் நாள் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டார். பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை தனது மிக் 21 விமானத்தில் துரத்தி சென்றவர், பாகிஸ்தான் எல்லைக்குள் தாக்கப்பட்டார். அதன்பின் சிறை பிடிக்கப்பட்டார். ஆனால், இவரை இந்தியா எப்படி மீட்கப்போகிறது என்ற கேள்வி எழுந்தது. இதற்காக இந்தியா உலக நாடுகள் மூலம் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தது. அதேபோல் ஜெனிவா ஒப்பந்தம் குறித்து நிறைய விவாதங்கள் செய்யப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தான் ராவல்பிண்டியில் உள்ள அபிநந்தன் விமானம் மூலம் லாகூருக்கு அழைத்து வரப்பட்டார். அதன்பின் அங்குள்ள இந்திய தூதரகத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து பாக். இராணுவ பாதுகாப்புடன் வாகா எல்லை கொண்டு வரப்பட்டார். லாகூரிலிருந்து அவர் கார் மூலமாக, வாகா எல்லை அழைத்துவரப்பட்டார். இதையடுத்து இந்தியாவிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். இந்திய தூதரக அதிகாரிகளின் துணையுடன் அவர் இந்திய எல்லைக்குள் காலடி எடுத்து வைத்தார். இராணுவ அதிகாரிகள், முக்கிய பாதுகாப்பு படை வீரர்கள் இதனால், வாகா எல்லைக்கு வந்திருந்தனர். எல்லைக்குள் வந்த அபிநந்தனை இந்திய விமானப்படை வரவேற்றது. பாகிஸ்தான் இராணுவம், இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் அபிநந்தனை ஒப்படைந்தனர்.

பாதுகாப்புத்துறை அதிகாரிகள், முப்படையை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் அங்கு அபிநந்தனை வரவேற்றனர்.

எப்போதும் வாகா கதவுகள் திறக்கும் போது அதை காண மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இந்த முறை பாதுகாப்பு கருதி, நிகழ்வு நடக்கும் பகுதியில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், வெளியில் மக்கள் பெரிய அளவில் கரகோஷம் எழுப்பி அபிநந்தனை வரவேற்றார்கள். கரகோஷங்கள் விண்ணைப் பிளக்க அபிநந்தன் இந்தியாவிற்கு அடியெடுத்து வைத்தார்.

 

 

Sat, 03/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை