வாய்ப்புற்றுநோயை தடுப்பதற்கு சுண்ணாம்பு, புகையிலை இல்லாத தாம்பூலம் அவசியம்

ஏழு வருடங்களுக்கு முன்னர் 2012ஆம் ஆண்டு சுகாதார அமைச்சராக இருந்தபோது சுண்ணாம்பு, புகையிலை மற்றும் பாக்குகள் இல்லாத ஆரோக்கியமான முன்மாதிரி தாம்பூலம் ஒன்றை மகா நாயக்க தேரர்களுக்கு பூஜை செய்து, தான் இந்த நாட்டின் மகா சங்க தலைமுறையினரிடம் முன்வைத்த கோரிக்கையை மீண்டும் ஒருமுறை சங்கைக்குரிய மகா சங்கத்தினரிடம் முன்வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

புகையிலை மற்றும் பாக்குடன் தொடர்புடைய உற்பத்திகளின் காரணமாக இன்று இலங்கை வாய்ப் புற்று நோய் தொடர்பில் பாரிய சவாலுக்கு முகங்கொடுத்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த சவாலிலிருந்து தேசத்தை விடுவிக்க வேண்டுமானால் சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டுமென குறிப்பிட்டார்.

உலக வாய்ச் சுகாதார தினத்தை முன்னிட்டு நேற்று (01) முற்பகல் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தாம்பூலம் எமது பௌத்த கலாசாரத்துடன் இணைந்த முக்கியமானதொரு அம்சம் என்றபோதும், காலத்தின் தேவையை கருத்திற்கொண்டு அதனை ஆரோக்கியத்தைப் பேணும் தாம்பூலமாக மாற்ற வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதற்கான முக்கிய பொறுப்பு பௌத்த மக்களுக்கு உள்ளதாகவும் மகா சங்கத்தினரின் தலையீட்டுடன் இதுபற்றிய அறிவூட்டல் மற்றும் தெளிவுகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 20ஆம் திகதி உலக வாய்ச் சுகாதார தினமாக சர்வதேச பல் மருத்துவர் சங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. “வாய்ச் சுகாதாரத்திற்காக அனைவரும் ஒன்றுபடுவோம்” என்ற கருப்பொருளின் கீழ் இம்முறை இத்தினம் அனுஷ்டிக்கப்படுவதுடன், உலக வாய்ச் சுகாதார தினத்துடன் இணைந்ததாக நடைபெறும் வாய்ப் புற்று நோயை தவிர்க்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

வாய்ப் புற்றுநோய் தற்போது முக்கிய பொது சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளது. வாய்ப் புற்று நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக வெற்றிலை சாப்பிடுதல் பழக்கம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, இந்த நோய் அதிகம் ஆண்களிடையே பரவி வருகின்றது. குறிப்பாக மலை நாட்டு பிரதேசங்களில் உள்ள மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாய்ப் புற்று நோய் காரணமாக நாட்டில் நாளொன்றுக்கு சுமார் மூன்று பேர் மரணமடைகின்றனர்.

வாய்ச் சுகாதார மேம்பாட்டை கொள்கை சார்ந்ததொரு அம்சமாக கருதி முன்னுரிமையளிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வெற்றிலை சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்களை அதிலிருந்து மீட்பதற்கு ஆலோசனை நிலையங்களை தாபிப்பது உள்ளிட்ட அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களை தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.

சுண்ணாம்பு, புகையிலை மற்றும் பாக்கு இல்லாத ஆரோக்கியமான முன்மாதிரி தாம்பூலம் ஒன்றையும் ஜனாதிபதி மகா சங்கத்தினருக்கு வழங்கினார்.

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் வாய்ப் புற்று நோய் நோயாளிகளின் சுக துக்கங்களையும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.

வாய்ப் புற்று நோய்க்கு ஆளாகி சுகம் பெற்றவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள அமைப்பின் உறுப்பினர்கள் சிலரினால் ஜனாதிபதி அவர்களிடம் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. மேல் மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய, சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, பேராசிரியர் காலோ பொன்சேகா, வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய நிபுணர் வசந்த திசாநாயக்க, வைத்திய நிபுணர் ஜகத் பலவர்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Sat, 03/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை