2030 இல் இரு மடங்கு சுத்தமான குடிநீர் விநியோகம்

சுத்தமானதும், பாதுகாப்பானதுமான குழாய் மூலமான குடிநீர் விநியோகத்தை 2030ஆம் ஆண்டளவில் இரண்டு மடங்காக அதிகரிக்க முடியுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார். அதற்கு தமது அமைச்சு மட்டுமல்லாது,நீர்ப்பாசன திணைக்களம்,மகாவலி அதிகார சபை, வனபாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்பும் அவசியமெனவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஏற்பாடு செய்திருந்த உலக நீர் தினம் - 2019 தொடர்பான நிகழ்வு (22), கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இங்கு உரையாற்றினார்.இங்கு பேசிய அவர்,

“யாரையும் விட்டு வைப்பதில்லை” என்ற தொனிப் பொருளில் இவ்வாண்டு உலக நீர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படக்கூடிய நீருடன் சம்பந்தப்பட்ட பல்வேறுபட்ட சவால்களை சமாளிப்பதற்கு தயாராக வேண்டிய காலம் நெருங்கிவிட்டது.

தசாப்தகாலங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப் பட்ட லபுகம, களட்டுவாவ மற்றும் அம்பத்தலே பாரிய நீர்த்தேக்கங்களுடன் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்ட நீர்த்தேக்கமும் கணிசமான பாவனையாளர்களின் நாளாந்த சுத்தமான குடிநீர்த் தேவையை நிவர்த்தி செய்கிறது. தற்போது நாட்டின் வேறு பிரதேசங்களிலும் நீர்த் தேக்கங்கள் நிர்மாணிக்கப்படடு வருகின்றன.

நாட்டின் நாலாபுறங்களையும் ஊடறுத்துச் செல்லும் 103 ஆறுகள் மூலமும் மக்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கின்றது. இதனால் விவசாய நிலங்களும் செழிப்படை கின்றன. மகாவலி கங்கை, களுகங்கை, கலா ஓயா, தெதுறு ஓயா மற்றும் மல்வத்து ஓயா போன்ற ஆறுகள் இவற்றில் முக்கியமானவை.

இயற்கையான நீர் ஊற்றுகளையும், நீர்ச் சுனைகளையும் அடையாளம் கண்டு நீர்த் தேக்கங்களை அமைப்பதன் மூலம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புப் சபையும் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களமும் பொது மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீரை வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின் போது நாட்டில் மேற்கொள்ளப்படும் குடிநீர் திட்டங்களின் செயற்பாடுகளை எடுத்துக்காட்டும் ஊடகப்பிரிவினால் தயாரிக்கப்பட்ட ஒரு குறுந்திரைப்படமும் காண்பிக்கப்பட்டது.

இதில் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன, அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார், பிரதித் தலைவர் எம்.எச்.எம்.சல்மான், பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

Mon, 03/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை