நாடு முழுவதும் இன்று முதல் நான்கு மணிநேர மின்வெட்டு

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும் கோரிக்கை

வரட்சியான காலநிலையுடன் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை சமாளிப்பதற்காக இன்று முதல் நாடு முழுவதும் 4 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

தினமும் காலை 3 மணிநேரமும் மாலையில் ஒருமணி நேரமும் மின்வெட்டு செயற்படுத்தப்படவுள்ளது. வரட்சியான காலநிலை மாறும் வரை இந்த திட்டம் அமுலிலிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக நீரேந்து பகுதிகளில் மழை வீழ்ச்சி குறைந்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வரட்சியுடன் மின்சாரத்துக்கான கேள்வியும் உயர்வடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் முன்னறிவிப்பின்றி மின்துண்டிப்புகள் இடம்பெற்றன. இது தொடர்பில் மின்சார சபைக்கும்

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந் நிலையிலே இன்று திங்கட்கிழமை முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை அல்லது காலை 11.30 மணி முதல் 2.30 மணி வரை அல்லது பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான அட்டவணையில் ஏதாவது ஒரு நேரத்தில் மின்வெட்டு மேற்கொள்ளப்பபடும். அத்தோடு மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அல்லது இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இரவில் ஒரு மணிநேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படும் எனவும் மின்சார சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, மின்வெட்டை அமுல்படுத்த மின்சார சபை இது வரை அனுமதி பெறவில்லை என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.முன்கூட்டி அறிவித்த பின்னரே மின்வெட்டு அமுல்படுத்த வேண்டும் எனவும் ஆனால் கடந்த சில தினங்களாக முன்அறிவிப்பின்றி மின்வெட்டு இடம்பெற்றதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு பணிப்பாளர் ஜெயந்த ஹேரத் தெரிவித்தார். இது தொடர்பில் மின்சார சபை பொது முகாமையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2018/2019 இல் மின்சாரப் பற்றாக்குறை ஏற்படும் என 2016 இலே எச்சரித்திருந்தோம். இதற்கு தேசிய திட்டமொன்றை தயாரிக்குமாறும் மின்சாரத் திட்டங்களை முன்டெடுக்குமாறும் கோரியிருந்தோம். ஆனால் அதனை செய்ய மின்சார சபை தவறியதாகவும் அவர் கூறினார்.

2015 முதல் 2022 வரை மின்சாரத்திற்கான கேள்வி 5.5. வீதத்தினால் எதிர்பார்க்கப்பட்டது. இதனை சமாளிக்க முன்கூட்டி திட்டங்கள் வகுப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதே வேளை நீரேந்து பகுதிகளில் உள்ள 6 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 34.3 வீதமாக குறைந்துள்ளதாக அறிவிக்கப் படுகிறது. காசல்ரீ நீர் மட்டம் 9 வீதமாகவும் மவுசாகெலே 26.5 வீதமாகவும் கொத்மலை 34.2 வீதமாகவும் விக்டோரியா 36.9 வீதமாகவும் ரந்தெனிகல 88 வீதமாகவும் சமநலவெல நீர் மட்டம் 18 வீதமாகவும் குறைந்துள்ளது. இதே வேளை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சு பொதுமக்களை கோரியுள்ளது.(பா)

ஷம்ஸ் பாஹிம்

 

Mon, 03/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை