தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளுக்கு மின்சாரம்; எவரது அனுமதியும் தேவையில்லை

மின்சார இணைப்பை பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் புதிதாக முன்வைத்துள்ள புதிய கொள்கையின் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு மின்சாரம் பெற எவரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் எழுந்தால் அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறு பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம், மின்சார இணைப்பை பெற்றுக்கொள்வதற்கு முன்வைத்துள்ள புதிய நடைமுறை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.  

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,  உண்மையில் இந்த நடைமுறை பாராட்டத்தக்க ஒன்றாகும். பெரும்பாலும் இலங்கையில் மின்சாரத்தைப் பெறுவதில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இனி எவரும் பெருந்தோட்டங்களிலுள்ள வீட்டில் வசிப்போருக்கு மின்சார இணைப்பு வழங்க முடியாது எனக்கூற முடியாது.   இந்த விடயம் தொடர்பில் மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.  

ஒருவர் குறித்த வீட்டில் வாழ்வது உறுதி செய்யப்படுமானால் அவருக்கு மின்சார இணைப்பு வழங்கப்படல் வேண்டும்.

இதற்கு முன்னர் இருந்த சட்டத்திட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன. எனவே, பெருந்தோட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்குத் தேவையான மின்சார இணைப்பை பெற்றுக்கொள்ள தங்கள் பிரதேசத்திலிருக்கும் மின்சாரசபையின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு மின்சாரத்தை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நடைமுறை தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் தனது அமைச்சை தொடர்பு கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார். 

Thu, 02/14/2019 - 09:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை