தேசிய அரசாங்கம் அமைப்பதில் ஐக்கிய தேசிய முன்னணி உறுதி

சபையில் நாளை பிரேரணை சமர்ப்பிப்பு நிறைவேற்றி ஜனாதிபதியிடம் கையளிப்போம்

தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பிரேரணை நாளை (07) வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சபை முதல்வரும் அரச தொழில் முயற்சி, கண்டி மரபுரிமைகள், கண்டி அபிவிருத்தி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஏற்கனவே நல்லாட்சி அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறியதால் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து அரசாங்கத்தை அமைத்தது. தனிக்கட்சி அரசாங்கமாக அமைந்ததால் அமைச்சரவையின் அமைச்சுக்களின் எண்ணிக்கையை ஜனாதிபதி 29 ஆக மட்டுப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் அரசுடன் இணைந்திருக்கும் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டு ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக்கொண்டது.அக்கட்சியை இணைத்து தேசிய அரசாங்கத்தை அமைக்க ஆளும் தரப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய தின வைபவத்தில் உரையாற்றும் போது அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதற்காக தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சியை கடுமையாக விமர்சித்து அந்த முயற்சியை, தாம் நிராகரிப்பதாக அறிவித்திருந்தார்.

இது குறித்து அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியதாவது: அரசியல் யாப்பின் 46 ஷரத்துக்கமைய பெரும்பான்மையுள்ள ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், முஸ்ஸிம் காங்கிரஸை இணைத்து தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பிரேரணையை நாளை வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்.

அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுப்பதற்கு ஏதுவாக அமைச்சரவையின் எண்ணிக்கையை 48 ஆக அதிகரிக்கவும் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கையை 45 ஆக அதிகரிக்கும் வகையிலேயே தேசிய அரசாங்கத்தை அமைக்கத்துள்ளோம்.

இந்த யோசனையை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றி அதனை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்து தேசிய அரசாங்கத்தை உடனடியாக அமைக்க ஆளுந்தரப்பு தீர்மானித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். எண்ணிக்கை ஒன்றா, பத்தா என்பதல்ல பிரச்சினை. வேறொரு கட்சி இணைந்தால் தேசிய அரசாங்கத்தை அமைக்க முடியும். இதற்கு அரசியலமைப்பில் இடமுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமல்ல வேறு சில கட்சி உறுப்பினர்களும் இத்திட்டத்துக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளனர். அவர்கள் யாரென்பதை அடுத்த இரண்டொரு நாட்களுக்கிடையில் அறிந்து கொள்ள முடியுமெனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் யோசனை நிறைவேற்றப்பட்டால் அதற்கமையை தேசிய அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி உடன்பட வேண்டும். இதனை அவரால் நிராகரிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எம். ஏ. எம். நிலாம்

Wed, 02/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை