சு.க.உறுப்பினர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை

புதிய தேசிய அரசாங்கத்தை சுதந்திரக் கட்சி முற்றாக நிராகரித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவாக வாக்களிக்கும் தமது கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து விலகியதையடுத்து நாட்டில் தற்போது தேசிய அரசாங்கமொன்று இல்லையென சுட்டிக்காட்டிய தயாசிறி எம்.பி, மீண்டும் புதிதாக தேசிய அரசாங்கமொன்றை நிறுவுவதில் சுதந்திரக் கட்சிக்கு ஆர்வம் இல்லையென்றும் கூறினார்.

இந்த அரசாங்கத்துக்கு இன்னும் சிறிய ஆயுட்காலமேயுள்ளது,இந் நிலையில் நாட்டின் நன்மைக்காகவன்றித் தமது கட்சியைப் பாதுகாப்பதற்கே தேசிய அரசாங்கத்தை நிறுவும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்கியிருப்பதாகவும் அவர் விசனம் தெரிவித்தார். கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்றுக் காலை (05) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே தயாசிறி எம்.பி இவ்வாறு கூறினார்.

மேலும் முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சி என்ற அடிப்படையில் மீண்டும் இக்கட்சியுடன் இணைந்து உருவாக்கும் தேசிய அரசாங்கம் செல்லுபடியற்றது என்றும் அவர் கூறினார்.

" ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்க எண்ணியிருக்கும் தேசிய அரசாங்கம் சட்டவிரோதமானது.அதை ஒரு போலியான நடவடிக்கை என்றே நாம் பார்க்கின்றோம். எனவே இதனை அங்கீகரிக்க முடியாது. பாராளுமன்றத்தில் இதைத் தோற்கடிப்பது குறித்து எமது கட்சி உறுப்பினர்களிடையே கலந்துரையாடி வருகின்றோம். தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் சுதந்திரக் கட்சி உறுதியாக இருக்கின்றது. இந்நிலையில் அரசாங்கத்திலிருக்கும் எமது கட்சி உறுப்பினர்களால்கூட இதற்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது. கட்சியின் நிலைப்பாட்டை மீறி அவர்கள் ஆதரவளித்தால் கட்சி அவர்களுக்கெதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்," என்றும் அவர் விளக்கமளித்தார்.

"புதிய தேசிய அரசாங்கத்தின் மூலம் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்வடையும். இதனால் மேலதிகமாக பல அமைச்சர்களுக்கு சம்பளம், வாகனம், சலுகைகள் என்பன வழங்க நேரிடும். இது மக்களுக்கு சுமையாக அமையுமேயன்றி எவ்விதத்திலும் நன்மையளிக்காது," என்றும் அவர் குறிப்பிட்டார். இச்செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது-

நாடு ஏதேனும் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கும் சந்தர்ப்பத்தில் பல கட்சிகள் ஒன்று சேர்ந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது பொதுவான விடயம். எனினும், இந்த அரசாங்கத்துக்கு குறைந்தளவு ஆயுட்காலம் உள்ள நிலையில் ஐ.தே.க தமது சுயநலத்துக்காகவே தேசிய அரசாங்கத்தை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

லக்ஷ்மி பரசுராமன் 

 

Wed, 02/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை