பாதாள குழுத் தலைவன் மாக்கந்துரே மதுஷ் துபாயில் கைது

பிரபல பாடகர் உட்பட 25 சகாக்களும் அதிரடிக்கைது

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் பாதாள கும்பலை துபாயிலிருந்து வழிநடத்திவருவதாகக் கூறப்படும் மாக்கந்துரே மதுஷையும் அவரது சகாக்கள் 25பேரையும் துபாய் பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

மதுஷுடன் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டவர்கள் என்றும் அவர்களுள் இலங்கையின் பிரபல பாடகர் ஒருவரும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் கைதுசெய்யப்பட்டதால் போதைப்பொருள் வர்த்தகத்தின் முக்கிய வலையமைப்பு முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்களுள் பிரசித்தி பெற்ற இலங்கைப் பாடகரும் அவருடைய இளம் மகனும் இருப்பதாக தெரியவந்துள்ளது. அத்துடன் கைதின்போதும் இவர்களிடம் பெருந்தொகையான போதைப் பொருள் இருந்ததாகவும் அதில் சிலர் போதைப்பொருளை பயன்படுத்திய நிலையில் இருந்ததாகவும் துபாய் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

விருந்துபசார நிகழ்வில் மேற்படி 25 பேரும் ஒன்றாக கூடியிருந்தபோதே துபாய் பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.

சர்வதேச பேதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட முக்கியப் புள்ளியான மதுஷ் கைது செய்யப்பட்டதன் பின்னர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு ஆட்டம் கண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இவர்கள் இதுவரை காலமும் நாட்டின் முக்கியப் பிரமுகர்களின் ஒத்துழைப்புடனேயே இக்கடத்தல் வியாபாரத்தை முன்னெடுத்திருந்ததாகவும் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இக்கடத்தலுடன் தொடர்பு பட்ட அனைத்து தரப்பினரதும் விவரங்கள் விரைவில் அம்பலத்துக்கு வருமென்றும் பாதுகாப்பு தரப்பு எதிர்பார்த்திருக்கிறது. இப்போதைப் பொருள் ஒழிப்பு முயற்சியில் இக்ைகது மிக முக்கியமானதொரு மைல் கல்லாக அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.

இக்கும்பலின் கைது போதைப்பொருள் ஒழிப்புக்கான முயற்சிகளில் பெரும் வெற்றி இலக்காகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட அங்கொட லொக்கா மற்றும் அவரோடு தொடர்புபட்டவர்களைக் கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்ைக எடுத்தபோது மதுஷ் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு தப்பியோடி துபாயில் தலைமறைவாகியிருந்ததாக புலனாய்வு பிரிவு உறுதிசெய்துள்ளது.

பிரபல அரசியல்வாதி டெனி ஹித்தெட்டியவின் படுகொலையுடன் மதுஷ் மற்றும் குழுவினர் தொடர்புபட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது. இதன்போது அவரை கைது செய்ய முயன்ற சந்தர்ப்பத்திலேயே அவர் துபாய்க்கு தப்பியோடியிருந்தார். இக்ேகாஷ்டி துபாயுடன் மட்டுமன்றி மலேசியா, சிங்கப்பூர், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக அறியக்கிடைத்துள்ளது.

இப்போதைப் பொருள் வர்த்தகத்துக்காக இவர்கள் செய்மதி தொடர்புசாதனம், ஈஸிகேஷ் முறையிலான பணப்பரிமாற்றம் ஆகியவற்றை முன்னெடுத்து வந்தனர்.

அத்துடன் சிறைச்சாலையிலுள்ள பலரிடமும் இவர்கள் போதைப்பொருள் வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளனர். இவர்களை கைது செய்வதற்காக பொலிஸார் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பைக் கோரியிருந்தனர். அதேவேளை இலங்கை பொலிஸ் குழுவினரும் துபாய்க்குச் சென்று இவர்கள் தொடர்பில் பேச்சு நடத்தியிருந்தனர். மதுஷ் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் வசமிருந்து சுமார் 2 ஆயிரம் கிலோ கடந்த வருடம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கைதின் மூலம் உலகளாவிய மட்டத்தில் போதைப் பொருள் வர்த்தகம் பாரியளவில் மட்டுப்படுத்தப்படலாமென பொலிஸார் நம்புகின்றனர்.

துபாய் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலென்றுக்கமையவே அந்நாட்டுப் பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர். இச்சந்தேக நபர்கள் தொடர்பில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பில் இரண்டு நாடுகளுக்கிடையிலும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.

லக்ஷ்மி பரசுராமன்

Wed, 02/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை