சட்ட மாஅதிபர் விபரங்கள் வழங்கினால் சபையில் சமர்ப்பிக்க முடியும்

திருட்டு, கொலை, நிதி மோசடி குற்றச் செயல்கள் தொடர்பில் நீதிமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் வெளிநாட்டில் உள்ளனரா? என்பது குறித்த விபரங்களை சட்ட மாஅதிபர் திணைக்களம் வழங்கினால் அவற்றை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க முடியுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பிரதமர் கேள்வி நேரத்தில் ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

மோசடிகள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளவர்கள் குறித்து, நளிந்த ஜயதிஸ்ஸ எம்.பி கேள்வியெழுப்பியிருந்தார்.

இவர்களின் விபரங்களை நாட்டிலுள்ள 32 மேல் நீதிமன்றங்கள் மற்றும் 49 நீதிமன்றங்களிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாக சட்டமா அதிபர் அறிவித்திருப்பதாகவும், அவ்வாறான விபரங்கள் கிடைத்த பின்னர் அதுபற்றி பாராளுமன்றத்துக்கு அறிவிக்க முடியும் என்றும் பிரதமர் பதிலளித்தார்.

பொதுவாக வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகளை நாட்டுக்குள் அழைத்து வருவதாயின் சர்வதேச பொலிஸாரான இன்டர்போலின் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுத்து, நீதிமன்றமொன்றின் உத்தரவுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம், ஏதாவது ஒரு நாட்டுடன் கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் புரிந்தணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருந்தால் அதன் அடிப்படையில் கைதிகளை நாட்டுக்குள் கொண்டுவர முடியும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஆசிய கடற்பரப்பில் போதியளவு கடற் படைத்தளங்கள் உள்ள நிலையில் அமெரிக்காவுக்கு இலங்கை ஒரு இலக்கல்ல என்றும் அமெரிக்க கடற் படைக்கப்பல்கள் இலங்கைக்கு வருவதால் அமெரிக்காவுக்கு இங்கு இராணுவத் தளம் அமைத்துக்கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும் வாசுதேவ எம்.பியின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

1995ம் ஆண்டு உடன்படிக்கையை வைத்துக்கொண்டு எதிர்க் கட்சியினர் சபையை திசை திருப்பி ஏமாற்றப் பார்ப்ப தாகவும் பிரதமர் தெரிவித்தார்.

வெளிநாட்டமைச்சின் இது தொடர்பான ஆவணம் தமது கையில் உள்ளதாகத் தெரிவித்த வாசுதேவ நாணக்கார எம். பி. பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரமின்றி அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்காவின் கடற்படைத் தளங்கள் ஆசிய எல்லைகளில் அமைந்துள்ளன. அதன் பிரதான கடற்படைத் தளமானது, ‘டியாவே கேர்சியா’ தீவில் அமைந்துள்ளது. இது அமெரிக்காவின் 7ம் 8ம் படையணியினரால் உருவாக்கப்பட்டுள்ளது அதேபோன்று பஹ்ரைனிலும் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைந்துள்ளது. இவையாவும் அமெரிக்காவின் முக்கிய கடற்படைத்தளங்களாகும்.

அமெரிக்கக் கடற்படையினர் பல்வேறு நாடுகளுக்கும் செல்கின்றனர். இவை இயல்பாக இடம்பெறும் செயற்பாடுகளாகும். அமெரிக்கா மட்டுமன்றி ஏனைய நாட்டுக் கப்பல்களும் இலங்கைக்கு வருகின்றன. அவர்களை எல்லாம் கைது செய்ய முடியாது. அவர்கள் சில நேரம் மது அருந்தலாம். அதுவும் பெரிய விடயமல்ல. அமெரிக்காவின் பாரிய விமானம் தாங்கி கப்பலான ‘ஜெரால்ட் போர்ட்’ யுத்தக் கப்பலில் உள்ளடங்கும் விமானங்கள் எமது நாட்டிலுள்ள அனைத்து விமானங்களையும் விட அதிகமானதாகும். அந்தக் கப்பல் ஒரு இலட்சம் தொன் நிறைகொண்டதாகும்.

அதுபோன்ற கப்பல்கள் இலங்கை துறைமுகத்திற்குள் வரமுடியாது. அதற்கான வசதிகள் இங்கு கிடையாது.

இந்த வகையில் வளங்கள் பரிமாற்றத்திற்காக நாம் இடமாளித்தல் அமெரிக்கா இலங்கையில் கால் பதிக்க இடமளித்ததாகாது என்றும் சபையில் பிரதமர் தெளிவு படுத்தினார்.

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

Thu, 02/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை