இறக்குமதியாகும் பால்மாவின் தரம்

நுகர்வோர் அதிகார சபையிடம் அறிக்கை கோருகிறது அரசு

இலங்கைக்கு இறக்குமதி செய்யும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு மற்றும் மெலமைன் கலக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களின் உண்மைத் தன்மையை அறிவதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் அறிக்கையைக் கோரவுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று விமல் வீரவன்ச எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டு மக்களைப் பெரிதாகப் பாதிக்கும் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பது அவசியமென்று விமல் வீரவன்ச எம். பி. சபையின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதற்குப் பதிலளித்த சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல: இது தொடர்பில் ஆராய்வதற்கு எமது நாட்டில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை செயற்படுகிறது. அதன் மூலம் குழு அமைக்கப்பட்டு ஆராய்ந்த பின்னர் அறிக்கை ஒன்றைப் பாராளுமன்றம் பெற்றுக் கொள்ளும் எனவும். இந்த அறிக்கை கிடைத்த பின்னர் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் பிரதியமைச்சர் புத்திக பத்திரண பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விடயங்களை முன்வைத்திருந்தார். இந்த விவகாரத்தின் பாரதூரத்தை விளங்கிக்கொள்ள அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என விமல் வீரவன்ச எம்.பி. தமது கேள்வியில் வலியுறுத்தினார்.

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

 

 

 

Thu, 02/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை