திருமதி சார்ள்ஸ் மீது எவ்வித குற்றச்சாட்டும் இருக்கவில்லை

*மாஃபியாக்களின் தலையீடுகளைத் தடுக்கவே ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியை நியமித்தோம்

*சுங்கம், துறைமுக ஊழல் மோசடி தொடர்பில் விசாரிக்க அமைச்சரவை உபகுழு

மிளகு, கொட்டைப்பாக்கு மற்றும் போதைப் பொருள் கடத்தல் மாஃபியாவில் தொடர்பு பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் செயற்பாடுகளை நிறுத்தும் நோக்கில் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியை பணிப்பாளர் நாயகமாக நியமிப்பதற்கு தீர்மானித்தோமே தவிர பதவியிலிருந்த பி.எஸ்.எம் சார்ள்ஸ் மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் இருக்க வில்லையென நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நேற்று தெரிவித்தார்.

பணிப்பாளர் நாயகம் பி.எஸ்.எம் சார்ள்ஸ் மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லாததன் காரணமாகவே அவரை சுங்கத் திணைக்களத்திலிருந்து வெளியேற்றாமல் தொடர்ந்தும் கண்காணிப்பாளராக நியமித்ததாகவும் அமைச்சர் கூறினார்.

சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தை பதவி நீக்கியமை தொடர்பான உண்மைக் காரணத்தை ஊடகங்களுக்கு அறியத்தருவதற்காக நேற்று (06) நிதி மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின்போதே அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்தார்.

இச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறியதாவது-,

இலங்கையில் மிளகு மற்றும் கொட்டைப் பாக்கு உற்பத்தியாளர்கள் இருக்கின்றபோதும் இவை இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது சுங்கத்தினூடாக ஒரு மாஃபியாவாக நடைபெறுகிறது. இச் செயன்முறை 2012 ஆம் ஆண்டு ராஜபஷவின் அரசாங்க காலத்திலே ஆரம்பிக்கப்பட்டது.பின்னர் தற்போதைய அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்களும் இதில் இணைந்து கொண்டனர். பின்னர் இந்தியாவுடனான மிளகு ஏற்றுமதி ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி மீண்டும் புதிய நிபந்தனைகளுடன் அது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று இதுவொரு பிரபல மாஃபியாவாக மாறியுள்ளது. இதனை முடிவுக்கு கொண்டுவரவே சுங்கப்பணிப்பாளராக கடற்படை அதிகாரியொருவரை நியமித்தோம். இராணுவ அதிகாரிகளை தூதுவர்களாக நியமிக்க முடியுமென்றால் ஏன் இவ்வாறான பதவிகளுக்கும் படைவீரர்களை நியமிக்க முடியாது. கடற்படை அதிகாரியை நியமித்தால் தமது வியாபாரத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாமல் போகுமென ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் அஞ்சி விட்டனர். இந்த வர்த்தகம் மட்டுமல்ல 16 பில்லியன் ரூபாவை நாட்டுக்கு கிடைக்க விடாமல் செய்த பி.எம்.டபிள்யு வர்த்தகம் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணையை முடிவுக்கு கொண்டுவர பி.எஸ்.எம் சார்ள்ஸூக்கு மேலும் கால அவகாசம் வழங்கியிருந்தோம். அவரின் அறிக்கை கிடைத்தவுடன் சுங்கம் மற்றும் துறைமுக ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை நடத்த, உப குழுவொன்றை அமைச்சரவை நியமிக்கும்.

அதேபோல் 2018 ஆம் ஆண்டு சுங்கத்திணைக்கள வருமான இலக்கு 1.068 ட்ரில்லியன் ரூபாவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 51 நாள் ராஜபக்ஷ ஆட்சி காரணமாக அதனை எம்மால் அடைய முடியாமல் போனதுடன் 921 பில்லியன் ரூபா மட்டுமே வருமானமாகக் கிடைத்திருந்தது.

இக்காலப்பகுதியில் ரூபாவின் வீழ்ச்சி காரணமாக டொலரின் பெறுமானம் கூடியதாலும் சுங்கத்துக்கு பெருமளவு வருமானத்தை பெற முடியாமல் போனது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் மங்கள சமரவீர கூறியதாவது-

1867 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தினூடாகவே சுங்கம் தற்போதும் நிருவகிக்கப்படுகின்றது. எதிர்வரும் மாதங்களில் சுங்கத்துக்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை சுங்கப் பணிப்பாளர் நாயகம் பி.எஸ்.எம் சார்ள்ஸின் வேண்டுகோளுக்கிணங்க சுங்கத்தினூடாக நடைபெறும் போதைப் பொருள் கடத்தலை தவிர்ப்பதற்காக சுங்க அதிகாரிகளுடன் கூடிய படகு செயலணியொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

Thu, 02/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை