ஊடகவியலாளர்களுக்கு இழப்பீடு; வவுனியாவில் கலந்துரையாடல்

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஊடக அமைச்சு மற்றும் தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நேற்று வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. வவுனியா அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் ஊடக அமைச்சின் பணிப்பாளர் ஜயந்த, தகவல் திணைக்களப் பணிப்பாளர் ஹசன், மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் மற்றும் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஊடகவியலாளர் உடல், உள ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்பட்ட பாதிப்புக்கள், இழப்புக்கள், அச்சுறுத்தல்கள் குறித்து ஊடக அமைச்சினால் தகவல்கள் பெறப்பட்டு அதற்கான இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளதாக ஊடக அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

அவ்வாறான பாதிப்புக்கள் குறித்து விண்ணப்பிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் ஊடகவியலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் ஊடகவியலாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், ஊடகவியலாளருக்காக வழங்கப்படுகின்ற வங்கிக் கடன்களுக்கு அரச உத்தியோகத்தர்களின் பிணை அவசியமில்லை என்பதையும் இதன்போது வலியுறுத்தியிருந்தார்.

இதேவேளை, 2006 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் பாதிப்படைந்த ஊடகவியலாளருக்கான இழப்பீடுகளை வழங்க நாடு முழுவதும் ஊடக அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா விசேட நிருபர்

Sat, 02/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை