அம்பாறை கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க குழு நியமனம்

அம்பாறை மாவட்ட கரும்பு விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை காண்பதற்கு ஏதுவாக, குழுவொன்றை நியமித்து, அதன் அறிக்கையை ஒன்றரை மாதங்களுக்குள் சமர்பிப்பதற்கு அமைச்சர் நவீன் திசாநாயக்க, அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் உறுதியளித்தனர்.

கரும்புச் செய்கையில் ஈடுபட்டதன் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான இழப்பீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் மூன்று தசாப்த காலமாக சீனி உற்பத்திக்கு தேவையான கரும்புச் செய்கையில் உரிய அனுமதி பத்திரங்களுடன் ஈடுபட்டு வரும்நிலையில், கல்லோயா பெருந்தோட்ட (பிரத்தியக) கம்பனியின் செயற்பாடுகளின் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள கரும்பு செய்கை விவசாயிகள் அமைச்சர் ஹக்கீமுடன், பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை கொழும்பு 03 தேயிலை சபையின் கேட்போர் கூடத்தில் (13) சந்தித்து தமது பிரச்சினைகள் பற்றி முறையிட்ட போது, சம்பந்தப்பட்ட தனியார் கம்பனியின் சார்பிலும் உயர் அதிகாரிகள் சமுகமளித்திருந்தனர். ஆரம்பத்தில் இந்த பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் பற்றி அமைச்சர் ஹக்கீம் விளக்கமளித்த பின்னர், கரும்பு விவசாயிகளின் பிரதிநிதிகள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம் தமக்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் நெற் செய்கையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

பிரஸ்தாப தனியார் கம்பனி, கரும்பு செய்கையாளர்களை பயன்படுத்தி தங்களுக்கு மட்டும் இலாபகரமாக நடந்துகொள்வதாகவும், பாதிக்கப்பட்ட வறிய கரும்பு செய்கையாளர்களை நட்டத்திற்குள்ளாக்கி வருவதாகவும், அமைச்சர் நவீன் திசாநாயக்கவிடம் அவர்கள் கூறினர்.

சம்பந்தப்பட்ட கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர் அங்கு முன்வைத்த தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

கரும்பு செய்கையில் ஈடுபடும் இந்த விவசாயிகள் யுத்தம் நிலவிய காலத்திலும் 1990 ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டு வரை கரும்புச் செய்கையில் ஈடுபடுவதைவிடுத்து நெற் பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்ததாகவும், ஆனால், இப்பொழுது குறிப்பிட்ட கம்பனி தங்களுக்கு கரும்பு செய்கைக்கு தேவையான நிலத்தை பண்படுத்தல், உரம், களை நாசினிகள், அறுவடை செலவு என்பவற்றை வழங்கிவிட்டு, உற்பத்தி செய்த கரும்பின் நிறையை அளவிட்டு கொள்வனவு செய்யும்பொழுது வட்டியுடன் சேர்த்து செலவை கழித்துவிட்டு சிறிய தொகை பணத்தையே தங்களுக்கு வழங்குவதாக விவசாயிகள் விசனம் தெரிவித்தனர்.

Sat, 02/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை