பிரபலமான பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச வீரர்களாக மாறினர்

ஏராளமான பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச ரீதியில் பிரபல்யம் பெற்ற கிரிக்கெட் வீரர்களாக மாறியுள்ளனர். எனினும் 19 ஆவது வயதிலேயே அந்த பெருமையை பெறுவது தனித்துவம் மிக்கதும் மெச்சத்தக்கதுமாகும். அவ்வாறான அபூர்வ அனுபவத்தை பெற்ற கிரிக்கெட் வீரர்கள் மிகச் சிலரேயாகும்.

அந்த பெருமையை பெற்றுள்ள ஒரு சில கிரிக்கெட் வீரர்களில் அசங்க குருசிங்கவும் ஒருவர். அத்துடன் ரொஷான் மஹானாமவுக்கு பிறகு ஒப்சேவர் வருடத்தின் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருதை பெற்ற இரண்டாவது நாலந்தா கல்லூரி மாணவர் அசங்க குருசிங்க ஆவார்.

மஹானாம 1983 இல் ஒப்சேர்வர் பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை பெற்றார். அத்துடன் தொடர்ந்து இரண்டு வருடங்கள் இந்த விருதை பெற்ற முதலாவது பாடசாலை கிரிக்கெட் வீரர் மஹானாம தான். அதேநேரம் 1985 இல் இந்த விருதை பெற்றவரும் நாலந்தா கல்லூரி மாணவர் ஒருவர் தான். அவர்தான் அஸங்க குருசிங்க.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முகாமையாளருமான அசங்க குருசிங்க, ஒப்சேர்வர் வருடத்தின் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது பற்றி கூறும்போது, 1985 இல் தான் அந்த விருதை வென்றது தனது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது என்று கூறுகிறார்.

அசங்க குருசிங்க அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியின்போது 1985 ஆம் ஆண்டு தனக்கு ஒரு மறக்க முடியாத ஆண்டாக அமைந்திருந்ததாக குறிப்பிடுகிறார். ரொஷான் மஹானாம 1983 இலும் அதையடுத்து 1984 இலும் தொடர்ந்து இரு தடவைகள் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரர் விருதை வென்றதையடுத்து அந்த விருதை வெல்வது எவ்வளவு பெருமைக்குரியது என்பதை உணர முடிந்தது. அடுத்த வருடம் 1985 இல் அந்த விருதை நான் வென்றது மறக்க முடியாத அனுபவமாகும். ஒரு பாடசாலை வீரர் சிறப்பான வீரராகவும் தொடர்ந்து திறமை காட்டிவருபவராகவும் இருந்து கடுமையாக உழைத்தால் மாத்திரமே அந்த விருதை வெல்லும் பெருமையை பெறலாம் என்று 52 வயதான குருசிங்க கூறுகிறார்.

கிரிக்கெட் வட்டாரங்களில் ‘குரா’ என்ற குருசிங்க தமது பழைய நினைவுகளை மீண்டும் மீட்டிப்பார்க்கிறார். மஹானாம இரண்டு தடவைகள் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரர் விருதை வென்றது எமது பாடசாலைக்கு மிகுந்த பெருமையை தந்தது. ஒரு பாடசாலை வீரர் தீவிர அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்தால் அது அவரை நிச்சயம் மிகவும் உயரத்துக்கு எடுத்துச் செல்லும் என்று குருசிங்க கூறுகிறார்.

ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரர் விருதை ஏராளமான கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பெற்றுக்கொண்டமை எனக்குள் எண்ணைப்பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதற்கு ஐந்து மாதங்களுககுப் பின் நான் இலங்கை தேசிய அணியில் விளையாடும் சந்தர்ப்பத்தை மேற்படி நம்பிக்கையே ஏற்படுத்திக் கொடுத்தது.

19 ஆவது வயதில் விக்கெட் காப்பாளராக குருசிங்க டெஸ்ட் அறிமுகம் பெற்றார். அதனை யடுத்து இரண்டு ஒரு நாள் போட்டிகளுக்கும் மற்றுமொரு டெஸ்ட் போட்டிக்கும் அவர் விக்கட் காப்பாளராக இருந்தார். அதன் பின் அவர் மூன்றாம் இலக்க ஆட்டக்காரராக இலங்கைக்காக பல தடவைகள் சிறப்பான ஆட்டத்தின் மூலம் இலங்கை அணிக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

1979 முதல் தொடர்ந்து நான்கு தசாப்தங்களாக ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரர் விருது வழங்கல் விழாவை நடத்தி வருவதையிட்டு லேக் ஹவுஸ் நிறுவனத்துக்கும் குருசிங்க வெகுவாக பாராட்டினார். இந்த விழாவை தொடர்ந்து நடத்தி வருவதுடன் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் லேக்ஹவுஸின் இந்த செயற்பாடு எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. எங்கள் காலத்தில் நாங்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த ஒரு விழா இது என்று அவர் மேலும் கூறுகிறார்.

சிறந்த ஆட்ட துணுக்கத்தை பிரதிபலிக்கும் நம்பிக்கை மிகுந்த இடது கைது துடுப்பாட்ட வீரரான குருசிங்க நம்பிக்கை மிகுந்த மூன்றாம் இலக்க ஆட்டக்காரரான 1985 நவம்பர் 3 ஆம் திகதி இலங்கையின் நான்காவது ஒரு நாள் போட்டியிலேயே கிரிக்கெட் அறிமுகம் பெற்றார். இந்த ஒரு நாள் போட்டி இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையே நடைபெற்றது.

இலங்கைக்காக 147 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அசங்க குருசிங்க மொத்தம் 3902 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதில் இரண்டு சதங்களும் 22 அரை சதங்களையும் 28.27 என்ற சராசரியில் பெற்றார். ஒரு நாள் போட்டியில் முதலில் அறிமுகமான குருசிங்க அதற்கு நான்கு நாட்களின் பின் 1985 நவம்பர் 7 ஆம் திகதி இலங்கையின் டெஸ்ட் அணியில் அறிமுகம் பெற்றார். பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் அசங்க குருசிங்க அறிமுகமானார்.

இலங்கைக்காக மொத்தம் 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள குருசிங்க மொத்தம் 2453 டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுள்ளார். இதில் 7 சதங்களும் 8 அரைச் சதங்களும் அடங்குகின்றன. அவரது கடைசி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி 88 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது. அவரது டெஸ்ட் சராசரி 38.92 ஆகும். ஆகச் சிறந்த ஓட்டப் பெறுதி 143 ஆகும்.

பாடசாலை கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதன் அவசியம் பற்றி குருசிங்க வலியுறுத்துகிறார். எங்கள் காலத்தில் 1000 ஓட்டங்கள் அல்லது 100 விக்கெட்டுகள் என்பது இலகுவாக இருக்கவில்லை ஏனெனில் அப்போது பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் குறைவாகவே இருந்தன.

பாடசாலையில் நான் விளையாடிய கடைசி வருடத்தில் என்னைத்தவிர இன்னும் ஒரு வீரர் மட்டுமே அப்பருவகாலத்தில் ஆயிரம் ஓட்டங்களை பெற்றிருந்தார். எங்கள் காலத்தில் ரஞ்சன் மடுகல்ல, அர்ஜுன ரணதுங்க மற்றும் ரொஷான் மஹானாம ஆகியோரே பாடசாலை அணியில் இருந்து நேரடியாக தேசிய அணிக்கு சென்றனர். அதேபோல் இப்போதும் நடைபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று குருசிங்க கூறுகிறார்.

பாடசாலை கிரிக்கெட் போட்டிகளுக்கு தற்போது பார்வையாளர்கள் குறைந்துள்ளது கவலை தருவதாக உள்ளது. எங்கள் காலத்தில் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளை பார்க்க பார்வையாளர்கள் அதிக அளவில் வருகை தந்துள்ளனர். தற்போது அதிக அளவில் கிரிக்கெட் விளையாடப்படுவதும் இதற்கு ஒரு காரணமாகும். அதேநேரம் போட்டிகள் தொலைக்காட்சிகளில் காட்டப்படுவதும் இவ்வாறு பார்வையாளர்கள் குறைய மற்றொரு காரணமாகும்.

1983 ல் ரோயல் கல்லூரிக்கும் நாலந்த கல்லூரிக்குமிடையே நடைபெற்ற போட்டி இப்போது எனது ஞாபகத்துக்கு வருகிறது. நாங்கள் 5 போட்டிகளில் வென்று இந்த போட்டியை எதிர்நோக்கினோம். ரோயல் 7 போட்டிகளில் வென்றபின் இந்த போட்டியில் விளையாடியது. ரீட் அவெனியூவில் விளையாடப்பட்ட அந்த போட்டியை பார்ப்பதற்கு பார்வையாளர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.

பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் நன்றாக விளையாடினால் அவர்கள் எந்தக் கல்லூரியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பார்வையாளர்கள் அவர்களைப் பார்க்க ஏதாவது சிறப்பான துடுப்பாட்டத்தை அல்லது பந்து வீச்சைக் காண மைதானத்துக்கு வருவார்கள்.

அரவிந்த டி சில்வா டி.எஸ். சேனநாயக்க கல்லூரிக்காக விளையாடியபோது டி.எஸ். கல்லூரியுடன் எந்த தொடர்பும் இல்லாத பலர் அரவிந்தவின் ஆட்டத்தை காண மைதானத்துக்கு வருவதை நான் கண்டிருக்கிறேன்.

தற்போதைய நிலையில் பாடசாலை கிரிக்கெட்டுக்கும் இலங்கை ‘ஏ’ அணி மற்றும் தேசிய அணிக்கும் இடையில் பாரிய இடைவெளி இருப்பதை காண முடிகிறது என்று அசங்க குருசிங்க கருதுகிறார். எவ்வாறெனினும் பாடசாலை கிரிக்கெட்டுக்கு நல்லவொரு எதிர்காலம் உள்ளது. அதேநேரம் சிறந்த உடற் தகுதியை பேண முடிந்தால்தான் ஒரு கிரிக்கெட் வீரர் முழுமை பெறுகிறார் அத்துடன் கடுமையாக உழைக்க வேண்டும். 50 விக்கெட்டுகள் எடுத்தவுடன் தேசிய அணியில் இடம் கிடைத்து விடாது தொடர்ந்து விளையாடி தரத்தை பேணிக்கொண்டால் தான் குறித்த இலக்கை அடையலாம்.

Sat, 02/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை