ஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்

இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் உடலுக்குத் தீங்கிளைக்கக்கூடிய பதார்த்தங்கள் இருப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக நடத்தப்படக்கூடிய ஆய்வுகள் முன்னணி பால்மா நிறுவனங்களின் அழுத்தங்களால் இடையூறுக்கு உட்படுத்தப்படலாம் என வணிக மற்றும் கைத்தொழில் பிரதியமைச்சர் புத்திக்க பத்திரன தெரிவித்தார்.

பால்மாவில் உள்ளடங்கியுள்ள பதார்த்தங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்வதற்குத் தேவையான கருவிகளை கொள்வனவு செய்வதற்கு நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சு வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நேற்றையதினம் பாராளுமன்றத்தில் விசேட விளக்கமொன்றை முன்வைத்து உரையாற்றும்போதே பிரதியமைச்சர் இந்தக் கருத்தை முன்வைத்தார். இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றி கொழுப்பு மற்றும் மெலமைன் போன்ற உடலுக்குத் தீங்கிழைக்கும் பதார்த்தங்கள் இருப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக பிரதியமைச்சர் புத்திக்க பத்திரன கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.

எனினும், அவ்வாறு எந்தப் பதார்த்தங்களும் இல்லையென சுகாதார அமைச்சர் நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த நிலையில் பிரதியமைச்சர் நேற்று மீண்டும் பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,பால்மா விவகாரம் தொடர்பில் கருத்துக்களை முன்வைப்பதற்கான அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். ஏனைய பிரதியமைச்சர்கள் ஒவ்வொரு கருத்துக்களை முன்வைத்து ஊடகத்தில் பிரசாரம் பெற்றுக்கொள்வதைப் போன்று நான் பால்மா விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் கருத்துக்கூறவில்லை.

பால்மா தொடர்பில் கூறிய கருத்துக்கள் பொறுப்புடன் கூறிய விடயங்களாகும். இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பதார்த்தங்கள் இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நான் பொய்கூறியதாக சபையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முப்படையினருக்கும் உணவு பெற்றுக் கொடுப்பதில் காணப்படும் மோசடிகள், தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் நான் சபையில் வெளிக்கொண்டுவந்தமையால் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் பால்மாவில் காணப்படும் பதார்த்தங்கள் குறித்தும் நான் விபரங்களை வெளிக்கொண்டுவந்துள்ளேன்.

பிரதியமைச்சர் அலுவலகத்துக்கு பால்மா விவகாரம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளது. இது குறித்து ஆய்வுகளைச் செய்வதற்கு தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

பாராளுமன்றத்தில் நான் எந்தவொரு பால்மா நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை.

முன்னாள் சுகாதாரப் பணிப்பாளர் அத்துல கஹந்த லியனகே முன்னணி பால்மா நிறுவனத்தின் பொறுப்புள்ள பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சுகாதார அமைச்சில் தனக்கு கீழ் பணியாற்றிய அதிகாரிகளிடம் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு வாய்ப்பு இருப்பதுடன், பால்மாவில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பதார்த்தங்கள் உள்ளடக்கியமை தொடர்பான விசாரணைகளிலும் அழுத்தங்களைக் கொடுக்கலாம்.

அது மாத்திரமன்றி எமது அமைச்சில் கலந்துரையாடல்களுக்கு வந்த முன்னணி பால்மா நிறுவனத்தின் அதிகாரிகள், இந்தப் பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் இராஜதந்திர ரீதியில் தீர்வுகாணமுடியும் என்றும் கூறிச் சென்றனர்.

இலங்கை எந்தவொரு நாட்டினதும் காலனித்துவ நாடல்ல. எனவே ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் இதுவிடயத்தில் தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும். இவ்வாறான நிகழ்வுகள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதற்கு சட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

அரசாங்கம் நுகர்வோர் அதிகார சபை வெளிநாட்டு நிபுணத்துவ உதவியைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் ஆய்வை நடத்த வேண்டும். அது மாத்திரமன்றி குடிபானங்களில் காணப்படும் சீனி, குடிநீர் போத்தல்களில் காணப்படும் இரசாயன பதார்த்தங்கள் மற்றும் பால்மாவில் காணப்படும் உடலுக்கு தீங்கிழைக்கும் பதார்த்தங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய நிதியமைச்சு வரவுசெலவுத்திட்டத்தில் நிதியொதுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

(மகேஸ்வரன் பிரசாத்)

 

Sat, 02/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை