தேசிய அரசு அமைக்கும் பிரேரணை சட்டத்துக்கு முரண்

வரவு- செலவுத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதால் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பிரேரணையை அரசாங்கம் கொண்டுவர முடியாது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அவ்வாறான பிரேரணையொன்று கொண்டுவரப்படுமாயின் அது சட்டத்துக்கு முரணானதாக அமையும் என பாராளுமன்ற குழு அறையில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பிரேரணையொன்றை அரசாங்கம் எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரவுள்ளது.

பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இது உள்ளடக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரை இணைத்துக்கொண்டு தேசிய அரசாங்கம் அமைக்கும் திட்டத்துக்கு ஐ.தே.க முயற்சிக்கிறது.

அந்தக் கட்சியின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் பிரதியமைச்சுப் பதவிகளை வகிக்கும் நிலையில் தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சி சட்டத்துக்கு ஏற்புடையதல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

இருந்தபோதும் அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையென்பதால் நேற்றையதினம் (நேற்றுமுன்தினம்) தேசிய அரசாங்கம் அமைக்கும் பிரேரணையை சபையில் விவாதத்துக்கு எடுக்கவில்லை. தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதென்றால் பொதுத் தேர்தலுக்கு பின்னர் பெரும்பான்மை ஆசனங்களை கொண்ட கட்சிகள் இணைந்தே அமைக்க வேண்டும். இதனை விடுத்து வேறு கட்சிகளை கொண்டு தேசிய அரசாங்கத்தை அமைக்க முடியாது.

அதேநேரம், கடந்த 5ஆம் திகதி 2019ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டது. வரவுசெலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதால் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தேசிய அரசாங்கப் பிரேரணையை கொண்டுவர முடியாது.

தேசிய அரசாங்கத்தை அமைப்பதென்றால் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படுவதற்கு முன்னரே அமைக்கப்பட வேண்டும். அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தேசிய அரசாங்கத்தை அமைத்து அமைச்சுகக்களை மேலும் அதிகரித்தால், அதிகரிக்கப்பட்ட அமைச்சுக்களுக்கான நிதியை ஒதுக்க முடியாதுபோகும். எனவே மீண்டும் புதிதாக நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவேண்டியிருக்கும். அவ்வாறான நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் யோசனை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்றும் கூறினார்.

இதேவேளை, வரவுசெலவுத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டமை மற்றும் வரவுசெலவுத்திட்ட தயாரிப்பு விடயங்களில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றியிருப்பதாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பந்துல குணவர்தன எம்பி சுட்டிக்காட்டினார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

Sat, 02/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை