செவ்வாயில் காணாமல்போன ‘ஒப்போர்சுனிட்டி’ செயலிழப்பு

செவ்வாய் கிரகத்தில் கடந்த எட்டு மாதங்களாக தொடர்பை இழந்திருந்த நாசாவின் ஒப்போர்சுனிட்டு ஆய்வு இயந்திரம் செயலிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் செவ்வாய் கிரகம் முழுவதையும் தாக்கிய பயங்கர புழுதிப் புயல் காரணமாகவே கடந்த 15 ஆண்டுகளாக அந்தக் கிரகத்தில் பல கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வந்த ஒப்போர்சுனிட்டி செயலிழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த ஆய்வு இயந்திரத்துடன் தொடர்பை ஏற்படுத்த 800 தடவைகளுக்கு மேல் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

புழுதிப் புயலால் ஆய்வு இயந்திரத்திற்கு ஆற்றலை வழங்கும் சூரியசக்தி தகடுகள் புதையுண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனால் அதன் பெட்டரிகளை மின்னுௗட்டம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம். இந்நிலையில் நாசா கடந்த புதன்கிழமை கடைசியாக ஒப்போர்சுனிட்டியுடன் தொடர்பை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சியும் தோல்வி அடைந்ததை அடுத்து அது செயலிழந்து விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

செவ்வாய் மண் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய அங்கு அனுப்பப்பட்ட ஒப்போர்சுனிட்டி 90 நாட்கள் மாத்திரம் இயங்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டிருந்தது. உயிரனங்கள் வாழும் அளவிற்குச் செவ்வாய் கிரகத்தில் வெப்பநிலையும் தண்ணீரும் இருந்தது என்பதை உறுதிப்படுத்துவதற்கான முக்கியத் தகவல்களை ஒப்போர்சுனிட்டி சேகரித்தமை குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்தில் 45.2 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்துள்ள இந்த ஆய்வு இயந்திரம் 217, 594 புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது.

Fri, 02/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை