ட்ரகன்ஸ் வெற்றிக்கிண்ண கால்பந்தாட்டம் இறுதி போட்டிக்கு விம்பிள்டன் அணி தகுதி

புத்தளம் கால்பந்தாட்ட லீக்கினால் புத்தளம் நகரில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக தொடராக நடாத்தப்பட்டு வந்த ட்ரகன்ஸ் வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில், இறுதி போட்டியில் விளையாடும் பொருட்டு மற்றுமொரு அணியாக புத்தளம் நகரின் பிரபல அணியான விம்பிள்டன் கழக அணி தகுதி பெற்றுள்ளது.

புத்தளம் நகரின் மற்றுமொரு பிரபல அணியான லிவர்பூல் அணியினை 01 : 00 கோல்களினால் வெற்றி கொண்டதன் மூலமே விம்பிள்டன் கழக அணி இறுதி சுற்றுக்குள் பிரவேசித்துள்ளது.

இதன் மூலம் இச்சுற்றுப்போட்டியில் இறுதி போட்டியில் விளையாடும் பொருட்டு ஏற்கனவே தகுதி பெற்றுள்ள புத்தளம் யாழ் முஸ்லிம் யுனைடெட் அணியுடன் விம்பிள்டன் கழக அணி இறுதி போட்டியில் எதிர்த்தாடவுள்ளது.

இந்த போட்டியில் லிவர்பூல் அணி தோல்வியை தழுவினாலும் ட்ரகன்ஸ் வெற்றிக்கிண்ண இந்த நீண்ட கால கால்பந்தாட்ட தொடரில் மூன்றாம் இடத்தினை தக்க வைத்துக்கொண்டுள்ளது. நான்காவது இடத்தினை ஏற்கனவே புத்தளம் நியூ ஸ்டார்ஸ் அணி பெற்றுக்கொண்டுள்ளது.

ட்ரகன்ஸ் வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இந்த இரண்டாவது பரபரப்பான அரை இறுதி ஆட்டம் அண்மையில் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் லிவர்பூல் அணியினர் போட்டி ஆரம்பிக்க முன்பதாக கொழும்பு குப்பைக்கு எதிராக கருப்பு பட்டி அணிந்து காட்சியளித்தனர்.

இந்த இரண்டாவது பரபரப்பான அரை இறுதி ஆட்டம் புத்தளம் வாழ் கால்ப்பந்தாட்ட ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி ஒன்றாகும். வழமைக்கு மாறாக இந்த போட்டியினை கண்காணிப்பதற்கென விஷேட ஆணையாளராக இலங்கை கால்பந்தாட்டம் சம்மேளனம் சார்பாக அதன் மத்தியஸ்தர் சபையை சேர்ந்த எம்.சி.எம். ஜமாலுதீன் கலந்து கொண்டிருந்தார்.

முதல் பாதியில் இரு அணிகளும் எந்த ஒரு கோலினையும் பெற்றிருக்கவில்லை. எனினும் இரண்டாம் பாதியில் விம்பிள்டன் கழக அணியின் முன்னணி வீரர் ஜெ.எம். சிசான் தமது அணிக்கான கோலினை பெற்றார்.

ஏனைய மிகுதி நேரத்தில் போட்டி நிறைவு பெரும் வரை இரு அணிகளுமே கோல்களை புகுத்த எத்தனித்தும் அது முடியாமல் போனது.

போட்டி நிறைவு பெற ஓரிரண்டு நிமிடங்கள் இருக்கும் தருவாயில் லிவர்பூல் அணிக்கு தொடராக நான்கு கோனர் உதைகள் கிடைத்தும் அதில் ஒன்றை கூட கோலாக்க முடியாமல் ஆகியமை லிவர்பூலுக்கு ஒரு துரதிஷ்ட சம்பவமாகும்.

நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர நிறைவில் விம்பிள்டன் அணியானது தான் பெற்றுக்கொண்ட அந்த ஒரு கோலினால் வெற்றிவாகை சூடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

போட்டிக்கு நடுவர்களாக புத்தளம் லீக்கின் மத்தியஸ்தர் சபை அங்கத்தவர்களான எம்.எஸ்.எம். ஜிப்ரி, ஏ.ஓ. அசாம், எம்.ஆர்.எம்.அம்ஜத், ஏ.ஏ.எம்.கியாஸ் ஆகியோர் கடமையாற்றினர்.

இதன் இறுதி போட்டி கூடிய விரைவில் நடைபெறவுள்ளதாக தெரிவித்த புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் தலைவரும், புத்தளம் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.எம். ரபீக், தொடரில் சம்பியன் ஆகும் அணிக்கு 75 ஆயிரம் ரூபாவும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 40 ஆயிரம் ரூபாவும், மூன்றாம் இடம் பெறும் அணிக்கு 20 ஆயிரம் ரூபாவும், நான்காம் இடம் பெறும் அணிக்கு 15 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளதோடு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

புத்தளம் தினகரன் நிருபர்

Wed, 02/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை