தொடர்ந்தும் சுங்க அதிகாரிகள் போராட்டம்; அமைச்சில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை

அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவு  

சுங்க திணைக்கள உத்தியோகஸ்தர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையின் அடுத்த கட்ட முன்னெடுப்பு தொடர்பில் இன்று (05) முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்ய இருப்பதாக சுங்க தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இது தொடர்பான பேச்சுவார்த்தையில் சகல சுங்க தொழிற்சங்கங்களும் பங்கேற்பதாக சுங்க அதிகாரிகள் சங்க செயலாளர் பிரதி சுங்கப்பணிப்பாளர் விபுல மினுவம்பிடிய தெரிவித்தார்.  

சுங்கப்பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட பீ.எஸ்.எம். சார்ள்ஸ் திடீரென அந்தப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த வியாழக் கிழமை முதல் சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தொழிற்சங்க போராட்டத்தில் குதித்துள்ளது. தங்களுடைய கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ச்சியாக சட்டப்படி வேலை போராட்டத்தில் குதிக்க இருப்பதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் மினுவம்பிடிய தெரிவித்தார்.  

இன்று நடைபெறும் சுங்க தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தையின் பின்னர் அடுத்த கட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக முடிவு செய்ய உள்ளதாக குறிப்பிட்ட அவர், சுங்க தொழிற்சங்க நடவடிக்கைகாரணமாக கிழங்கு,வெங்காயம் மற்றும் மருந்து வகைகள் அடங்கலான அத்தியாவசியப் பொருட்கள் மாத்திரமே பரீட்சிக்கப்பட்டு வெளியில் கொண்டு செல்ல அனுமதிப்பதாகவும் தெரிவித்தார்.  

சுங்க தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பொருட்களைப் பரீட்சித்து வெ ளியில் எடுத்துச் செல்ல அனுமதிக்கும் நடவடிக்கைகள் தாமதடைந்து வருவதோடு அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானமும் குறைவடைந்து வருவதாக அறிய வருகிறது.  

நேற்று ஆறாவது நாளாகவும் சுங்க தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதே வேளை சுங்க தொழிற்சங்க நடவடிக்கையை அடுத்து பதில் சுங்கப் பணிப்பாளராக அமைச்சின் உதவி செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்ட போதும் அதனை தொழிற்சங்கங்கள் நிராகரித்திருந்தன. கடந்த காலத்தில் மீள் ஏற்றுமதிக்கென தருவிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் பல முறைகேடுகள் நடந்ததாகவும் அதற்கு வெளியாரின் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாகவும் தொழிற்சங்கள் குற்றஞ்சாட்டியிருந்தன. இந்த நிலையில் முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் சார்ள்ஸிற்கும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் இன்று முக்கிய பேச்சுவார்த்தையொன்று அமைச்சில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Tue, 02/05/2019 - 08:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை