பரிந்துரைகளை அமுல்படுத்த இலங்கை மீது சர்வதேச அழுத்தம் அவசியம்

தொண்டு நிறுவனங்கள் கோரிக்ைக

இலங்கையின் மனித உரிமை நிலைமையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கவிருக்கும் அறிக்கையை வரவேற்பதுடன், அதில் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை சர்வதேச நாடுகள் வழங்க வேண்டும் என சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து கோரிக்கைவிடுத்துள்ளன.

ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள 40ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து முன்வைத்துள்ள அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளன.

இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஏற்படும் காலதாமதங்கள் மற்றும் மந்த கதியிலான முன்னேற்றங்கள் குறித்து சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவை சுட்டிக்காட்டியுள்ளன. சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களான சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஆசிய அமைப்பு, மனித உரிமைகள் கண்காணிப்பகம், நீதிக்கான சர்வதேச ஆணைக்குழு, மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவைகள் உள்ளிட்ட 9 அமைப்புக்கள் இணைந்து இந்த அறிக்கையை முன்வைத்துள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகமாகவிருந்த ஹூசைன் மற்றும் தற்போதைய ஆணையாளர் பச்லெட் ஆகியோர் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளபோதும் மிகவும் மந்த கதியிலேயே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டியிருந்தனர்.

காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டபோதும் அது மிகவும் காலதாமதமான செயற்பாடாகவே அமைந்தது. பயங்கரவாதத்தை மீளப்பெற்றுக் கொள்வதாக அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறான நிலையில் 40வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் எழுத்துமூல அறிக்கையொன்றை முன்வைக்கவுள்ளார். இந்த அறிக்கையை சர்வதேச நாடுகள் வரவேற்பதுடன், அந்த அறிக்கையில் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

30/1 பிரேரணையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் மீள உறுதிப்படுத்தப்படுவதுடன், இதில் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்களின் முக்கியத்துவங்களும் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கவிருக்கும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பில் காணப்படும் முன்னேற்றங்களை அவ்வப்போது கண்காணித்து வாய்மூல மற்றும் எழுத்துமூல அறிக்கைகள் சர்வதேச நாடுகள் அதனை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அந்த அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

மெதுவான நடவடிக்கைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தி இலங்கைக்கு உரிய அழுத்தங்களைக் கொடுப்பதற்கும் சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும்.

உரிய கால அட்டவணைகளை வழங்காமல் பிரேரணைகளை நிறைவேற்றுவது முழுமையானதாக அமையாது. எனவே நடைமுறைப்படுத்துவதற்கான காலச் சட்டகம் ஒன்று இலங்கைக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு அமைப்புக்கள் மேலும் தெரிவித்துள்ளன.

(நமது நிருபர்)

 

Wed, 02/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை