காணாமல்போன ரத்கம வர்த்தகர்கள் கொலை; உடல்கள் எரிப்பு

Rizwan Segu Mohideen
காணாமல்போன ரத்கம வர்த்தகர்கள் கொலை; உடல்கள் எரிப்பு-Rathgama Murder-Bodies Burnt

- உப பொலிஸ் பரிசோதகரிடம் CID விசாரணை
- தென் மாகாண விசேட பிரிவு அதிகாரிகள் 15 பேர் இடமாற்றம்

காலி, ரத்கம, பூஸ்ஸவில் வர்த்தகர்கள் இருவர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

ரத்கம, பூஸ்ஸ, ரத்னஉதாகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ரசின் சிந்தக மற்றும் 33 வயதான மஞ்சுள அசேல குமார ஆகிய வர்த்தகர்கள் இருவர் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் ரத்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து பல்வேறு விடயங்கள் புலனான நிலையில், தென் மாகாண விசேட பிரிவு அதிகாரிகள் இருவர், குறித்த வர்த்தகர்கள் இருவரையும் கடத்தி சென்றதாக பிரதேசவாசிகள் தெரிவித்திருந்தனர்.

அதற்கமைய குறித்து விடயங்கள் அனைத்தையும் கருத்தில் கொள்ளப்பட்டு கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி, இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர், குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, சிஐடியினர் குறித்த விசாரணைகளை அன்றைய தினம் முதல் ஆரம்பித்திருந்தனர். விசாரணைகளுக்கு அமைய, ஒரு வார காலத்திற்குள் இச்சம்பவம் தொடர்பான அடிப்படை காரணங்கள் தொடர்பிலான தகவல்களை அவர்களால் பெற முடிந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி, தென் மாகாண விசேட பிரிவில் கடமையாற்றும், குறித்த பிரிவின் பதில் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த பொலிஸ் பரிசோதகர் கபில நிஷாந்த டி சில்வா CID யினால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதோடு, அவரை காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவருக்கு, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில், தென் மாகாண விசேட பிரிவில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை CID யினர் நேற்று (21) கைது செய்தனர். விராஜ் மதுசங்க எனும் 26 வயதான குறித்த சந்தேகநபரை 48 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரிப்பதற்கு காலி நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அதற்கமைய குறித்த உப பொலிஸ் பரிசோதகரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து, காணாமல் போன குறித்த வர்த்தகர்கள் இருவரும் அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளதோடு, அவ்விடயங்களை மேற்கொண்ட இடமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வர்த்தகர்கள் இருவரும் அக்மீமண, கொணாமுல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்து அடித்து கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த இடத்தை CID யினர் கண்டுபிடித்துள்ளதோடு, குறித்த இடம் காலி நீதவான் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த உப பரிசோதகரிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து கொலை செய்யப்பட்ட குறித்த வர்த்தகர்கள் இருவரினதும் உடல்கள் எரிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களது உடல்களை எரித்த இடத்தையும் CID யினர் கண்டுபிடித்துள்ளனர்.

அதற்கமைய, வலஸ்முல்ல, மெதகங்கொட பகுதியிலுள்ள காட்டுப் பகுதியிலேயே வர்த்தகர்கள் இருவரினதும் உடல்கள் எரிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த இடத்திற்கு வலஸ்முல்ல நீதவான், அரசாங்க இராசாயன பகுப்பாய்வாளர் மற்றும் மாத்தறை நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆகியோரை CID யினர் வரவழைத்து விசாரணைகளை மேற்கொண்டதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

அத்துடன் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய தென் மாகாண விசேட பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 15 பேரை அங்கிருந்து இடமாற்றம் செய்து மேல் மாகாணத்திற்கு இட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய இது தொடர்பான மேலதிக விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு வருதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

Fri, 02/22/2019 - 18:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை