அரசியலமைப்பை மீறி தேசிய அரசாங்கம் அமைக்கப்படாது

அரசியலமைப்புக்கு முரணாக தேசிய அரசாங்கம் அமைக்கப்படாதெனத் தெரிவித்துள்ள நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்துக் கட்சிகளையும் பொது அரங்கில் ஒன்றிணைக்கும் நோக்குடனேயே தேசிய அரசு அமைக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒத்த கருத்துடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். நீண்டகாலமாக கையாளப்பட்டுவரும் ஒருவிடயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முனைகின்ற போது வாதப் பிரதிவாதங்கள் எழுவது தவிர்க்க முடியாதுதான். ஆனால் அதனை புரிதலுடன் நோக்கும் போது சரியான நிலைப்பாட்டுக்கு வரமுடியும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது எனவும் அமைச்சர் கபீர் சுட்டிக்காட்டியுள்ளார்.இது பற்றித் தெரிவித்த

அமைச்சர்: தேசிய அரசாங்கம் தொடர்பில் இன்று நீண்ட வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. நாளாந்தம் ஊடகங்களில் இதற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகின்றன. ஐக்கிய தேசிய முன்னணி நேர்மையான, நல்லெண்ணத்து டனேயே இத்திட்டத்தை முன்னெடுக்கிறது. 19வது அரசியலமைப்புத் திருத்தத்தின் சட்டவரையரைக்கு உட்பட்டதாகவே தேசிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறோம்.எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யாப்புக்கு முரணாக செயற்பட ஐக்கிய தேசிய முன்னணி அரசு முற்படவில்லை. தேசிய அரசாங்கத்தை தனிக்கட்சியால் உருவாக்க முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளைக் கொண்டே அதனைச் செய்ய வேண்டும்.இன்றைய அரசுடன் இணைந்து செயற்பட பல கட்சிகளைச் சேர்ந்தோர் முன்வந்துள்ளனர்.

மக்களும், அரசியல்வாதிகளும் அரசுக்கு பலம் சேர்த்து பொது வேலைத் திட்டத்தின் கீழ் செயற்பட்டு நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல விருப்பம் கொண்டுள்ளனர். நாட்டில் அரசியல் ஸ்திரநிலையை ஏற்படுத்த வேண்டியது முக்கியமானதாகும். முதலில் நாடு குறித்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதற்காகவே தேசிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.

எம். ஏ. எம். நிலாம்

Thu, 02/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை