வெனிசுவேலாவில் அரசியல் பதற்றம்

தலைநகரில் போட்டி தரப்புகள் பரஸ்பரம் பாரிய ஆர்ப்பாட்டம்

வெனிசுவேல ஜனாதிபதி நிகொலஸ் மடுரோ மற்றும் அவரது போட்டியாளரான தன்னைத் தானே இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்ட எதிர்க்கட்டித் தலைவர் ஜுவான் குவைடோவுக்கு ஆதரவு வெளியிட்டு தலைநகர் கரகாசில் பரஸ்பரம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.  

தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு குவைடோ எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்ததோடு, தாமே நாட்டின் ஒரே ஜனாதிபதி என்று தனது ஆதரவாளர்கள் முன் மடுரோ குறிப்பிட்டார்.  

குவைடோ கடந்த மாதம் தன்னை ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்டதற்கு அமெரிக்கா மற்றும் பல லத்தீன் அமெரிக்க நாடுகளும் ஆதரவு வெளியிட்டன.  

ரஷ்யா மற்றும் சீனா மடுரோவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளன.  

பல எதிர்க்கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டு அல்லது புறக்கணிக்கப்பட்ட நிலையில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று தனது இரண்டாவது தவணைக்காக ஜனாதிபதியாக மடுரோ பதவி ஏற்ற பின்னரே தற்போதைய அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கரகாசில் கூடிய ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் முன் பேசிய குவைடோ, “தமது ஆதரவாளர்கள் சுதந்திரத்தை எட்டும் வரை ஆர்ப்பாட்டங்கள் தொடரும்” என்று குறிப்பிட்டார்.  

தனக்கு முந்திய சோசலிச தலைவரான ஹூகோ சாவேஸ் ஆட்சிக்கு வந்து 20 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற மடுரோ ஆதரவு பேரணியில், அரசுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை சர்வதேச ஊடகங்கள் பெருட்படுத்துவதில்லை என்று மடுரோ குற்றம்சாட்டினார்.  

வெனிசுவேலாவில் முன்கூட்டிய தேர்தலை நடத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த காலக்கெடு முடியும் திகதியிலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படாவிட்டால் எதிர்க்கட்சி தலைவர் குவைடோவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.  

மடுரோ தொடர்ந்து அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதில் இராணுவம் அவருக்கு வழங்கும் ஆதரவு தீர்க்கமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் மடுரோ ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பலரும் இராணுவம் உடையுடன் இருப்பதை காண முடிந்தது.  

எனினும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னர் உயர் நிலை விமானப்படை ஜெனரல் ஒருவர் குவைடோவுக்கு ஆதரவை வெளியிட்டு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். எனினும் அவர் ஒரு துரோகி என்று விமானப்படை உயர் கட்டளையகம் அறிவித்துள்ளது.      

Mon, 02/04/2019 - 13:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை