முற்றாக முடங்கியது வடக்கு; ஐந்து மாவட்டங்களிலும் பூரண ஹர்த்தால்

பாதுகாப்புத் தரப்பில் நெருக்குவாரம் இல்லை; கருப்புச் சட்டை அணிந்த தமிழ் இளைஞர்கள் குழப்பம் 

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்கக்கோரி நேற்று (25) வட மாகாணம் முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. 

இதனால், வடக்கின் ஐந்து மாவட்டங்களும் நேற்று முற்றாக முடங்கியிருந்தன. வர்த்தக நிலையங்கள், அரச, தனியார் வங்கிகள், பாடசாலைகள் என அனைத்தும் மூடப்பட்டு வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. காணாமல்போன தமது உறவுகளுக்கு நீதி கோரி, கிளிநொச்சியில் நடத்தப்பட்ட மக்கள் பேரணிக்கு ஆதரவளித்தே ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.  

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது அமர்வு நேற்று ஆரம்பமான நிலையில், காணாமல்போன தமது உறவுகளுக்கு நீதி கோரி காணாமல்போனவர்களின் குடும்பத்தினர் கிளிநொச்சியில் பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு ஆதரவாக வடக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்கினர். இந்தக் கோரிக்கையை ஏற்று வடக்கில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் முழுமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.  

நேற்றுக் காலை 9மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான மக்கள் பேரணி ஏ9வீதி 155ஆம் கட்டையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை வரை சென்றடைந்து மகஜரும் கையளிக்கப்பட்டது.

இந்தப் பேரணியில் அரசியல் கட்சி வேறுபாடுகள் இன்றி பலரும் கலந்துகொண்டனர். காணாமல்போனவர்களின் உறவினர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.  

ஐ.நா மனித உரிமை பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம் மற்றும் காணாமல்போனவர்களின் உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் இரண்டு வருடங்களை எட்டியமை ஆகியவற்றைக் குறிக்கும் நோக்கிலும், நீதி கோரியுமே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

மதத்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திரகுமார், சுரேஷ் பிரரேமச்சந்திரன், வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர்கள், பொது அமைப்புகள், யாழ் பல்கலைகழக சமூகம், தொழிற்சங்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் சட்டத்தரணிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தார்கள்.  

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் வேண்டாம், சர்வதேச விசாரணையே வேண்டும்” “போதும் இந்தச் சோதனை, நமக்கு ஏனிந்த வேதனை கண்ணீருடன்தான் நாங்கள் வாழ வேண்டுமா?” “போதும் போதும் ஏமாற்று நாடகங்கள் இனியும் நாங்கள் ஏமாறிகள் அல்ல பங்காளிகளே பதில் சொல்லுங்கள் எங்கள் உறவுகள் எங்கே என்று” போன்ற கோஷங்களையும் கேள்விகளையும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினார்கள்.  

இராணுவத்தில் ஒப்படைக்கப்பட்டு காணாமல்போன தமது சொந்தங்களில் புகைப்படங்களைத் தாங்கியவாறு கண்ணீருடன் பலர் கலந்துகொண்டனர். கிளிநொச்சியில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்திருந்தனர். தமக்கு விரையில் நீதி கிடைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியிருந்தார்கள். பிற்பகல் 1மணியளவில் பேரணி முடிவுக்குவந்தது.  

பேரணியை முன்னிட்டு கிளிநொச்சியில் அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டு, அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டமையால் நகர் வெறிசேடியிருந்தது. பாடசாலைகளுக்கு உள்ளுர் ஆசிரியர்கள் வருகை தந்திருந்த போதும் மாணவர்கள் எவரும் சமுகமளித்திருக்கவில்லை. அரச திணைக்களங்களில் வெளிமாவட்ட உத்தியோகத்தர்கள் பேரூந்து போக்குவரத்து இன்மையால் பெருமளவு சமுகமளித்திருக்கவில்லை. திணைக்களங்கள் திறக்கப்பட்டிருந்தபோதும் சேவைகள் இடம்பெறவில்லை. இவ்வாறு மாவட்டத்தின் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திக்கு ஆதரவு வழங்கியிருந்தார்கள்.  

கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரமன்றி வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிலைமையே காணப்பட்டது. காலை முதல் சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்ததுடன், வங்கிகளில் ‘இன்று மூடப்பட்டுள்ளது’ என்ற அறிவிப்பு வாசகங்களும் ஒட்டப்பட்டிருந்தன. மாணவர்களின் வருகை இன்மையால் பாடசாலைகள் இயங்கவில்லை. போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டிருந்ததுடன், நகரங்கள் மற்றும் வீதிகள் யாவும் வெறிச்சோடிப்போயிருந்தன.  

இதேவேளை, பேரணியின் போது கருப்புச் சட்டைகள் அணிந்துகொண்ட தமிழ் இளைஞர்கள் சிலர் குழப்பம் விளைவித்ததையும் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. இந்தப் பேரணி சகல தரப்பினராலும் பொதுவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதும் இந்த இளைஞரணி தாம் ஏற்பாடு செய்த பேரணி போன்று காண்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவிலிருந்து வந்த ஊடகவியலாளர்களுடனும் முரண்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தைச் சேர்ந்த கூட்டமைப்பு அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்கள் என நம்பப்படும் இந்த இளைஞர்கள் போராட்டத்துக்கு வருகைதந்திருந்த அரசியல்வாதிகள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டுத் தாம் கொண்டுவந்திருந்த பதாகைகளைப் பிடித்துக்கொண்டு முன்நோக்கிச் சென்றுள்ளனர். கிளிநொச்சி டிப்போ சந்தியைப் பேரணி நெருங்கியபோது அனைவரையும் வீதியில் அமருமாறும் அவர்கள் கூறியுள்ளனர். எனினும், பேரணியில் கலந்துகொண்ட ஏனையவர்கள் வீதியில் அமராது தொடர்ந்து செல்லுமாறு கூற முறுகல் நிலையொன்று ஏற்பட்டுள்ளது.  

குறித்த இளைஞர் அணியினரை ஊடகவியலாளர் படம்பிடிக்க முற்பட்டபோது ஊடகவியலாளர்களையும் அவர்கள் தாக்கியுள்ளனர். காணாமல்போனோர் அலுவலகம் தேவையில்லையெனப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் கோஷம் எழுப்ப, காணாமல்போனோர் அலுவலகம் தேவை என அந்த இளைஞர் குழு கோஷம் எழுப்பியது. தமது அரசியல் தலைவர் மிகவும் கஷ்டப்பட்டு பாராளுமன்றத்தில் பேசி கொண்டுவந்த காணாமல்போனோர் அலுவலகத்தை வேண்டாமென்று கூறமுடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பேரணி முடியும்வரை அவர்களின் குழப்பமான செயற்பாட்டை அவதானிக்க முடிந்தது.   

(கிளிநொச்சி குறூப், பரந்தன் குறூப், மன்னார் குறூப், யாழ்.விசேட நிருபர்கள்) 

Tue, 02/26/2019 - 08:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை