ஸ்தம்பிதமான நாட்டை மீண்டும் இயக்க அரசியல் மாற்றம் அவசியம்

நாடு ஒரே இடத்தில் இறுகி உள்ளதால் அதனை நிவர்த்திப்பதற்கு அரசியல் ரீதியான மாற்றம் அவசியமென்று மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.  

மொனராகலை பகுதியில் 40மெகாவாட் மின்சாரத்தை உற்பத்திசெய்யும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையத்தை பார்வையிடும் நிகழ்வில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   சில தரப்பினர் அடிப்படைவாதிகளாக செயற்படுகின்றனர். மேலும் ஒரு தரப்பினர் இனவாதத்தை கிளப்பி வருகின்றனர். நாட்டிற்காக குரல் கொடுக்கும் தலைவர்களை உருவாக்குவதே எமது முக்கிய நோக்கமாகும்.  

கடந்த 71வருடங்களாக நிறைவேற்று அதிகாரமுறையைக் கொண்டும் அது இல்லாமலும் நாட்டை ஆட்சி செய்துள்ளோம். 1978ல் நிறைவேற்று அதிகாரத்தை கொண்டுவந்தமையானது அது நாட்டிற்கு பொருத்தமானது என்பதாலேயே என்றும் அவர் தெரிவித்தார். எனினும் ஜே.ஆர். ஜயவர்தன, லலித் அத்துலத்முதலி, காமினி திஸாநாயக்க, ரணசிங்க பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இதனை சிறந்தது என்று கூறினாலும் சிலகாலம் சென்றதும் அதனை நல்லதல்ல என அனைவரும் கூற முற்பட்டனர்.  

நிறைவேற்று அதிகாரமுறையை இல்லாதொழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

எவ்வாறெனினும் நாட்டு மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிக்கிணங்க நிறைவேற்று ஜனாதிபதி முறை இல்லாதொழிக்கப்பட வேண்டும். நாம் இதற்கான வேலைத்திட்டமொன்றை கொண்டுவருவது அவசியம். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமுள்ளது. இது தொடர்பில் அனைத்துக் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

தற்போதுள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு நாட்டுக்கு தேவையான பாராளுமன்ற முறைமையையும் அதன் பெறுமதியையும் உணர்ந்து செயற்பட வருமாறு அழைக்கின்றேன்.

லோரன்ஸ் செல்வநாயகம் 

Tue, 02/19/2019 - 12:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை