வத்திக்கான் உயர் அதிகாரி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபனம்

வத்திக்கானின் மூன்றாவது மிக உயரிய அதிகாரியான கருதினால் ஜோர்ஜ் பெல் சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களைப் புரிந்ததாக அவுஸ்திரேலியாவில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு மெல்பேர்ன் தேவாலயம் ஒன்றின் அறைகளில் தேவாலயத்தில் பாடும் இரு சிறுவர்கள் மீது துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக நீதிபதிகள் குழுவால் குற்றங்காணப்பட்டுள்ளார். தான் குற்றமற்றவர் என அவர் வாதிடுகிறார்.

கடந்த டிசம்பர் மாதம் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டபோதும் சட்ட ரீதியான காரணங்களால் தற்போதே அது வெளியாகியுள்ளது.

பெல் மீதான இறுதித் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அவர் எதிர்பார்த்துள்ளார்.

வத்திக்கானின் பொருளாளரான 77 வயது கருதினால் பெல் திருச்சபையில் செல்வாக்கு மிக்க அதிகாரிகளில் ஒருவராவார்.

முதலாவது நீதிபதிகள் குழு தீர்ப்பு அளிக்க தவறியதால் அவர் மீதான வழக்கு கடந்த ஆண்டு இரண்டு தடவைகள் விசாரிக்கப்பட்டது. எனினும் இரண்டாவது நீதிபதிகள் குழு அவர் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர் மீது பாலியல் ரீதியில் செயல்பட்டதாக ஏகமனதாக குற்றங்கண்டது.

மதகுருக்களின் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து சர்வதேச அளவில் கத்தோலிக்க திருச்சபை அண்மைய ஆண்டுகளில் குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்து வருகிறது. அந்த குற்றச்சாட்டுகளை திருச்சபை மூடிமறைக்க முயல்வதாகவும் கூறப்பட்டது.

இது தொடர்பில் பாப்பரசர் பிரான்ஸிஸ் திருச்சபையில் முன்னெப்போதும் இல்லாத மாநாடு ஒன்றையும் நடத்தினார்.

1996 ஆம் ஆண்டு மெல்பேர்ன் ஆயராக இருந்தபோது ஆராதனையை தொடர்ந்து பெல் 13 வயது சிறுவர்களுடன் அறைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக விக்டோரியா மாவட்ட நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

இதில் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாக்குமூலத்தை நீதிமன்றம் பெற்றுக்கொண்டதோடு மற்றையவர் 2014 ஆம் ஆண்டு அதிக போதை காரணமாக உயிரிழந்துள்ளார்.

Wed, 02/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை