டிரம்பை சந்திக்க வியட்நாமை வந்தடைந்தார் கிம் ஜொங் உன்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் நேற்று வியட்நாமை வந்தடைந்தார்.

கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது சந்திப்பைத் தொடர்ந்தே அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையிலான இரண்டாவது சந்திப்பு இன்று ஆரம்பமாகவுள்ளது.

டொங் டங் எல்லை தரிப்பிடத்தை வந்தடைந்த கிம்மிற்கு மக்கள் கொடிகளை அசைத்து, படையினரின் மரியாதையோடு செங்கம்பள வரவேற்கு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் கார் வண்டியில் தலைநகர் ஹனோயை நோக்கி பயணித்தார்.

கிம் வட கொரியாவில் இருந்து சீனா வழியாக ரயில் வண்டியிலேயே வியட்நாமை வந்தடைந்தார். அவருடன் அவரது சகோதரி கிம் யோ ஜொங் மற்றும் பிரதான பேச்சுவார்த்தையாளரான முன்னாள் ஜெனரல் கிம் யொங் சோலும் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் உச்சநிலைச் சந்திப்பிற்கு முதல் நாள் (இன்று) இரவு விருந்தின் போது சந்திப்பார்கள் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இரவு விருந்துக்கு முன், சிறிது நேரம் இரு தலைவர்களும் தனியாகச் சந்தித்து வாழ்த்துப் பரிமாறிக் கொள்வார்கள். பின்னர், வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோவும் தற்காலிகத் தலைமை அதிகாரி மிக் மல்வேனியும் ஜனாதிபதி டிரம்்புடன் இணைந்து கொள்வர்.

அப்போது, கிம் தம்முடன் அதிகாரிகள் இருவரை இணைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழக்கிழமை இரு தலைவர்களும் சந்திக்கும்போது என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

எனினும் சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டுக்குப் பின்னர், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 02/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை