பாடசாலை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் 5,000 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு

DSI சுப்பர் ஸ்போர்ட் 19வது பாடசாலை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடர் பற்றி DSI அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்பை ஒலிம்பிக் ஹவுஸில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெளியிட்டது.

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் கல்வி அமைச்சின் பாடசாலை வொலிபோல் சங்கம் என்பனவற்றின் உதவியுடன், நாட்டின் முன்னணி காலணி உற்பத்தி நிறுவனமான DSI இந்த போட்டித் தொடரை ஏற்பாடு செய்துள்ளது. தற்போது, இலங்கையின் கரப்பந்தாட்ட வரலாற்றில் இது முக்கிய இடத்தை வகிக்கும் நிகழ்வாக மாறியுள்ளது.

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் கல்வி அமைச்சு என்பனவற்றின் உதவியுடன் DSI யினால் 1999 ஆம் ஆண்டில் இந்தப் போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட்டது. கிராமிய மற்றும் நகர்ப்புற கரப்பந்தாட்ட விளையாட்டு வீரர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்த தேசிய மட்டத்திலான தளம் ஒன்றை அமைத்துக்கொடுக்கும் நோக்கிலும் அங்கு அவர்களது திறமைகளை வெளிப்படுத்தி அதன் ஊடாக அவர்கள் உயர்ந்த நிலைகளை அடைந்து கொள்ளவும், தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல சாதனைகளை நிலைநாட்ட வாய்ப்பை பெற்றுக்கொள்ளவும் இது வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கிறது. இந்தப் போட்டித் தொடரை உருவாக்கியமை, சுமார் 40 விளையாட்டு வீர, வீராங்கனைகளை உருவாக்குவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

ஆரம்பத்தில் இந்நிகழ்வில் மொத்தம் 198 அணிகள் பங்குபற்றியிருந்தன. இவ்வருடம் போட்டித் தொடரில் 5,000 க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றும் என ஏற்பாட்டாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

மாவட்ட ரீதியிலும், தேசிய ரீதியிலும் போட்டித் தொடர்கள் இடம்பெறவுள்ளன. மாவட்ட ரீதியிலான போட்டிகள் ஏப்ரல் 27 முதல் மே மாதம் 05 ஆம் திகதி வரையும், தேசிய மட்டத்திலான போட்டிகள் ஜுலை 01 முதல் 07 வரையும் இடம்பெறும். இறுதிப் போட்டிகள் ஜுலை 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன. வயது எல்லைகள் 11 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண் / பெண், 13 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண்/ பெண், 15 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண் / பெண், 17 வயதக்கு கீழ்ப்பட்ட ஆண் /பெண், 19 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண் / பெண் என்பனவாகும். 11 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆண் / பெண் பிரிவானது இம்முறை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலைகள் மற்றும் நாடு தழுவிய ரீதியிலான DSI காட்சியறைகளில் பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் போட்டித் தொடருக்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அருகிலுள்ள DSI காட்சியறைகளில் கையளிக்கப்பட வேண்டும். மேலும், விண்ணப்பங்களை 'சந்தைப்படுத்தல் பிரிவு', இல.257, ஹை லெவெல் வீதி, நாவின்ன, மஹரகம என்ற முகவரிக்கு தபால் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம்.

2019 மார்ச் 29 ஆம் திகதி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய இறுதித் தினமாகும்.

Sat, 02/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை