‘கிரீன் புக்’ சிறந்த திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருது: ‘ரோமா’வுக்கு 3 விருது

இம்முறை ஒஸ்கார் விருது விழாவில் எவரும் எதிர்பார்க்காத வகையில் ‘கிரீன் புக்’ திரைப்படம் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட மூன்று விருதுகளை வென்றுள்ளது.

91ஆவது ‘அகாடமி அவோர்ட்ஸ்’ எனப்படும் ஒஸ்கார் விருதுகள் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக தொகுப்பாளர் இல்லாமல் இந்த விழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

உண்மை கதையை மையமாக கொண்டு உருவான கிரீன் புக் திரைப்படத்திற்கு சிறந்த படம், சிறந்த துணை நடிகர், உண்மை திரைக்கதை ஆகிய பிரிவுகளின் கீழ் 3 ஒஸ்கார் விருதுகள் கிடைத்தன. துணை நடிகருக்கான விருதை அந்தப் படத்தில் நடித்த மஹெர்ஷலா அலி வென்றார். பீட்டர் பரேலி இயக்கிய கிரீன் புக் திரைப்படம் அமெரிக்க பியானோ இசைக்கலைஞர் டொன் ஷிர்லியின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாகும்.

சிறந்த இயக்குநருக்கான ஒஸ்கார் விருது ரோமா பட இயக்குநர் அல்போன்சா குவாரனுக்கு வழங்கப்பட்டது. இந்த படமும் சிறந்த ஒளிப்பதிவாளர் விருது, வெளிநாட்டு திரைப்படம் என 3 ஒஸ்கார் விருதுகளை கைப்பற்றியுள்ளது.

வசூலில் சாதனை படைத்த ‘பிளக் பாந்தர்’ சிறந்த ஆடை வடிவமைப்பு, பின்னணி இசை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் மூன்று விருதுகளை வென்றது.

சிறந்த நடிகருக்கான விருதை ‘போமேனியன் ராப்சோடி’ படத்துக்காக ரொமி மலேக்கும், சிறந்த நடிகைக்கான விருதை ‘தி பேவரைட்’ திரைப்படத்துக்காக ஒலிவியா கோல்மேனும் வென்றனர்.

இந்த ஆண்டு ஒஸ்காரில் அதிகபட்சமாக ‘போமேனியன் ராப்சோடி’ திரைப்படம் நான்கு விருதுகளை பெற்றது. குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் நடித்த மாதவிடாய் குறித்து பேசும் ‘பீரியட். எண்டு ஓப் சென்டன்ஸ்’ சிறந்த குறும் ஆவணப்படத்துக்கான ஒஸ்கார் விருதை தட்டிச் சென்றது.

Tue, 02/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை