கடும் குளிரால் அமெரிக்கா ஸ்தம்பிதம்

தலைமுறைக்கு ஒரு தடவை ஏற்படும் கடுமையான உறைநிலை காலநிலை இந்த வாரம் அமெரிக்காவை தாக்கும் என்று காலநிலை அவதானிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

துருவ சூழல் என்று அழைக்கப்படும் கடும் குளிர்காற்று காரணமாக வெப்பநிலை மைனஸ் 53 செல்சியஸ் வரை குறைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெளியே செல்வதாயின் அதிகம் பேசுவதை தவிர்த்துக் கொள்ளும்படியும், ஆழமாக மூச்செடுப்பதை தவிர்த்துக்கொள்ளும்படியும் அயோவா மாநில காலநிலை அவதானிப்பாளர்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

குறைந்தது 55 மில்லியன் மக்கள் பூஜ்யத்திற்கும் குறைவான வெப்பநிலையை அனுபவித்துள்ளனர். இதில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் இன்று வியாழக்கிழமை வரை மிகக் குளிரான காலநிலை எதிர்பார்க்கப்படுவதோடு சிகாகோவில் ஆர்டிக்கை விடவும் குளிரான காலநிலை எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்காவில் குறிப்பாக மத்திய மேற்கு மாநிலங்களில் இந்த தாக்கம் கடுமையாக உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இதன் தாக்கத்தால் மக்கள் கடும் துயரை சந்தித்து வருகின்றனர்.

சிகாகோ நகரில் மைனஸ் 14 செல்சியஸ் வெப்பம் இருந்துள்ளது. அதாவது உறைநிலைக்கு 14 டிகிரி கீழ் வெப்பம் பதிவாகியுள்ளது. சிகாகோ நதி மற்றும் மிச்சிக்கன் ஏரி அகியவை தண்ணீர் பாறையாக உறைந்துள்ளன.

துருவச் சுழல் காரணமாக தற்போது அடிக்கடி வரும் குளிர் காற்று மக்களின் முதுகை சில்லிட வைக்கிறது. குளிரை சமாளிக்க நான்கு போர்வைகள் அணிந்தும் குளிர் தாங்காமல் நடுங்கியபடி மக்கள் உள்ளனர். நகரின் பல இங்களில் ஆறு அங்குலம் உயரத்திற்கு பனி படர்ந்துள்ளது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பல இடங்கள் பனியில் மூழ்கி விடும் என்று அஞ்சப்படுகிறது.

மத்திய மேற்கு மாகாணங்களான இல்லினாய்ஸ், இண்டியானா, மிச்சிகன், மின்னசோட்டா, மிசவுரி, வடக்கு டகோர்டா, விஸ்கான்சின் மாகாணங்களில் ரத்தத்தை உறையவைக்கும் மிக கடுமையான குளிர் நிலவுகிறது. வீடற்ற ஏழைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் ஆயிரம் விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடும் குளிரால் எரிபொருட்கள் உறைந்து போய் உள்ளதால் வாகனங்களை இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, வீதிகள் போக்குவரத்தும் முடங்கி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

துருவச் சுழல் காற்று இந்தக் குளிருக்கான காரணம் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். துருவச் சுழல் காற்று என்பது இயல்பாகப் பூமியின் இரு துருவங்களிலும் காணப்படுவது. துருவங்களைச் சுற்றிக் காணப்படும் குறைவான அழுத்தமும் குளிர் காற்றும் நிறைந்த பெரிய பகுதியே துருவச் சுழல் எனப்படுகிறது.

இவை பெரும்பாலும் நிலையானதாகவே காணப்படும். ஆனால் சில நேரங்களில் வட துருவங்களில் குளிர் காலம் நிலவும்போது இவை கீழிறங்கி தெற்கு நோக்கி நகரும் இதனால் குளிர் காற்றும் குளிரும் அதிகரிக்கும். இந்த முறை மிக அதிகமாகக் கீழிறங்கியுள்ளதால் அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Thu, 01/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை