வெனிசுவேல எதிர்க்கட்சி தலைவருக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை

வெனிசுவேல எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோ நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதோடு அவரது வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

வெனிசுவேல ஜனாதிபதி நிகொலஸ் மடுரோவுடன் அதிகார போட்டியில் ஈடுபட்டிருக்கும் குவைடோ, நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டுள்ளார்.

குவைடோவுக்கு அமெரிக்கா மற்றும் மேலும் பல நாடுகள் ஆதரவு அளித்திருப்பதோடு ஜனாதிபதி மடுரோவுக்கு ரஷ்யா உட்பட முக்கிய கூட்டணி நாடுகள் ஆதரவை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மடுரோ பேட்டி ஒன்றின்போது குறிப்பிட்டுள்ளார். “எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தை மேசையில் அமர நான் தயாராக உள்ளேன். அதன்மூலம் நல்ல வெனிசுவேலாவுக்காக பேச முடியுமாக இருக்கும்” என்று ரஷ்ய அரச செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏவுக்கு மடுரோ குறிப்பிட்டுள்ளார்.

எனினும் முன்கூட்டிய ஜனாதிபதி தேர்தலுக்கான வாய்ப்பை நிராகரித்த மடுரோ, 2025 வரை அடுத்த தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்றார். நல்லதொரு அரசியல் பேச்சுவார்த்தை ஒன்றுக்காக பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டி நடத்த தான் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்க ஜனாதிபதி மடுரோவுக்கு வரும் சனிக்கிழமை வரை ஐரோப்பிய ஒன்றியம் எட்டு நாள் காலக்கெடு விதித்திருந்தது. அவ்வாறு இல்லாவிட்டால் அந்த அமைப்பு குவைடோவை ஜனாதிபதியாக அங்கீகரிக்க வாய்ப்பு உள்ளது.

எதிர்க்கட்சி நேற்று அமைதியாக ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனிடையே வெனிசுவேலாவில் வெளிநாட்டு இராணுவத் தலையீடு ஒன்றுக்கு வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் குழு ஒன்று எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கனடா உட்பட 14 நாடுகளின் அமைப்பான லிமா குழு வெனிசுவேல பிரச்சினைக்கு சிறந்த தீர்வொன்றை காணும் என்று பெரு நாட்டு வெளியுறவு அமைச்சர் நெஸ்டோர் பொபோலிசியோ குறிப்பிட்டுள்ளார். இராணுவ தலையீட்டுக்கு அவர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அனைத்து வகையான சாத்தியங்கள் பற்றியும் அமெரிக்க வலியுறுத்தி வருகிறது.

கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கும் வெனிசுவேலாவின் அண்மைய வாரங்களில் வன்முறைகளும் அதிகரித்துள்ளன.

கடந்த ஜனவரி 10 ஆம் திகதி மடுரோ தனது இரண்டாவது தவணைக்காக பொறுப்பேற்றது தொடக்கம் நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ளன.

அவர் கடந்த ஆண்டு பல எதிர்க்கட்சி வேட்பாளர்களும் போட்டியிட தடை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய தேர்தல் ஒன்றின் மூலமே ஜனாதிபதியாக தெரிவானார்.

கடந்த ஜனவரி தொடக்கம் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக நுற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு மற்றும் குறைந்தது 40 பேர் உயிரிழந்திருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் அடிப்படை உணவுகளுக்கான தட்டுப்பாடு காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் வெனிசுவேலாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனிடையே குவைடோவுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி தலைமை அரச வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதற்கு வெனிசுவேல உச்ச நீதிமன்றம் உடன் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி குடியரசின் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தியது தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் பூர்த்தியாகும்வரை எதிர்க்கட்சி தலைவர் நாட்டை விட்டு வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது.

Thu, 01/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை