உலகின் கடினமான மலையேறும் சவாலுக்குத் தயாராகும் இலங்கை ஜோடி

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்த ஒரேயொரு இலங்கை ஜோடியான ஜயன்தி குரு உதும்பல மற்றும் ஜொஹான் பீரிஸ் ஆகியோர் உலக புகழ் பெற்றதும், மிகவும் கடினமான ஏழு சிகரங்கள் மலைத்தொடரை அடைவதற்கான முயற்சியில் முதற்தடவையாகக் களமிறங்க தயாராகி வருகின்றனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு எவரெஸ்ட் மலையை தொட்ட இலங்கையின் முதலாமவரான ஜயன்தி குரு உதும்பலவின் வரலாற்றில் இடம்பிடித்தார்.எனினும்,எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கான பயணத்தை 448 மீற்றரினால் துரதிஷ்டவசமாக தவறவிட்ட மற்றுமொரு இலங்கை வீரரான ஜொஹான் பீரிஸ், 2ஆவது தடவையாகவும் எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கான முயற்சியை கடந்த வருடம் மே மாதம் முன்னெடுத்து இருந்ததுடன் அதில் வெற்றியும் கண்டார்.

இந்த நிலையில், எவரெஸ்ட் சிகரத்துக்குப் பிறகு உலகின் மிகவும் உயரமான மலைத்தொடராக விளங்குகின்ற ஆர்ஜென்டீனாவில் உள்ள அகொன்கொகுவா (6962 மீற்றர்) மலைத் தொடரை அடைவதற்காக குறித்த இரு வீரர்களும் இன்று 31ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.

இதற்கு முன் 2014ஆம் ஆண்டு ஜயன்தி குரு உதும்பல மற்றும் ஜொஹான் பீரிஸ் ஜோடி தென்னாபிரிக்காவில் உள்ள கிலிமான்ஞாரோ மலைத்தொடரையும் வெற்றிகரமாக தாவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகவும் கடினமாக மலைகளில் ஒன்றாக கருதப்படுகின்ற ஏழு சிகரங்கள் மலைத்தொடரை 1985ஆம் ஆண்டு ரிச்சர்ட் பாஸ் என்பவர் முதற்தடவையாக அடைந்து வரலாற்றில் இடம்பிடித்தார்.

எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து ஒரு வருடங்கள் செல்வதற்கு முன் மற்றுமொரு கடினமான சவாலொன்றுக்கு முகங்கொடுக்கவுள்ள ஜொஹான் பீரிஸ், ஆர்ஜென்டீனாவுக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன் வழங்கிய செவ்வியில்,

எவரெஸ்ட் மலை உச்சியை அடைவதற்காக மேற்கொண்ட பயிற்சிகளைத் தான் இந்தப் மலைத்தொடரை தாவுவதற்கு மேற்கொண்டோம். நாங்கள் மனதளவிலும், உடல் ரீதியாகவும் சிறந்த முறையில் தயாராகியுள்ளோம். உண்மையில் கடந்த சில மாதங்களாக இதற்காக நாம் சிறப்பான முறையில் பயிற்சிகளை முன்னெடுத்தோம். எனவே ஜயந்தியுடன் இணைந்து மீண்டும் இலங்கைக்கு பெருமையைத் தேடிக்கொடுக்க எதிர்பார்த்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.

எவெரஸ்ட் மலை உச்சியை அடைந்த முதலாவது இலங்கையரான ஜயன்தி குரு உதும்பல கருத்து வெளியிடுகையில், உண்மையில் 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் மலையேற வேண்டும் என ஆர்வத்தோடு இருந்தேன்.அதன்பிறகு ஒருநாள் 2019ஆம் ஆண்டில் மீண்டும் மலையேறுவோமா? ஏன நான் யொஹானிடம் கேட்டேன். அதற்கு உடனே அவர் சம்மதம் தெரிவித்தார்.

ஆர்ஜென்டீனாவில் உள்ள அகொன்கொகுவா மலைத்தொடரை அடைவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

ஆனால் நாங்கள் மிகவும் கடினமானதும், சவால்மிக்கதுமான வழியைத்தான் இம்முறை தெரிவு செய்தோம். மலையேறுவதென்பது இலகுவான விடயமல்ல. பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும் என அவர் தெரிவித்தார்.

(பீ.எப் மொஹமட்)

Thu, 01/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை